காட்டில் துறவி ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்தார்.
அந்த வழியாக இளைஞன் ஒருவன் புலம்பிக் கொண்டே வந்தான்
.
துறவியை பார்த்ததும், “ஐயா, எனக்கு மனம் ஒரு நிலையாகவே இல்லை, எப்போதும் ஒரே குழப்பமாக இருக்கிறது. மற்றும் ஒரு நேரத்தில் சரியாக ஒரு வேலையைச் செய்ய முடியவில்லை. இதற்கு நீங்கள் தான் சரியான வழி சொல்ல வேண்டும்” என்றான்.
உடனே அந்தத் துறவி, “சரி, அருகில் குளம் ஒன்று இருக்கும். அங்கே நிறைய மீன்கள் இருக்கும். அதில் ஏதாவது ஒரு மீனைப் பிடித்துக் கொண்டு வா” என்றார்.
அந்த இளைஞன், “இதற்கும் மீனுக்கும் என்ன சம்பந்தம்? சரி எதுவா இருந்தால் நமக்கென்ன? நாம் போய் மீனைப் பிடித்து வருவோம்” என்று கிளம்பினான்.
அங்கேப் போய் அனைத்து மீன்களையும் துரத்தினான். ஒரு மணி நேரம் ஆகியும் அவனால் ஒரு மீனையும் பிடிக்க முடியவில்லை.
மீண்டும் துறவியிடம் வந்து, “ஐயா, என்னால் ஒரு மீனையும் பிடிக்க முடியவில்லை. அனைத்து மீன்களும் ஓடிவிட்டது” என்றான்.
உடனே துறவி, “நான் அனைத்து மீன்களையும் கேட்கவில்லையே, ஒரு மீன் மட்டும்தானே கேட்டேன். மீண்டும் போ ஒரே மீனில் மட்டும் கவனம் செலுத்து, இந்த முறை உன்னால் உறுதியாக ஒரு மீனைப் பிடிக்க முடியும்” என்றார்.
மீண்டும், அந்த இளைஞன் அந்தக் குளத்திற்குப் போனான். இப்போது அவன் ஒரு மீனில் மட்டுமேக் கவனம் வைத்தான். அந்த மீன் எங்கேப் போனாலும், எந்தத் திசையில் சென்றாலும் இவன் கவனம் அந்த மீனில் மட்டுமே இருந்தது. கடைசியாக வெற்றிகரமாக ஒரு மீனைப் பிடித்து விட்டு வந்தான்.
அப்போது துறவி சொன்னார்.
ஒரு செயலைச் செய்யும் போது பதற்றப்படாமல் ஒரு செயலில் மட்டுமேக் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், எப்போதும் சரியாக ஒன்றைச் செய்யமுடியாது என்றார். அந்த இளைஞன் மீனைக் குளத்தில் விட்டுவிட்டு திருப்தியோடு திரும்பினான்.