முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்துல ஒரு குழந்தை பிறக்க இருந்தது. குழந்தை பிறக்க இருக்கும் சிறிது நேரத்திற்கு முன்னர் குழந்தைக்கு ஒரு சந்தேகம் வந்தது.
“நான் ரொம்பச் சின்னக் குழந்தை. நான் எப்படி இந்த உலகத்தில் வாழ்வது? அதனால் தயவு செய்து நான் உங்களுடன் இருக்கிறேன். எனக்கு எங்கேயும் போகப் பிடிக்கவில்லை” என்று குழந்தை கடவுளிடம் சொன்னது.
அப்போது கடவுள் அந்தக் குழந்தையிடம் “அன்பான குழந்தையே! என்னிடம் நிறைய தேவதைகள் இருக்கிறார்கள், அதில் உனக்கு ஒரு தேவதையைக் கொடுத்து இருக்கிறேன். அவங்க உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். அதனால், நீ கவலைப்படாதே” என்றார் கடவுள்.
“ஆனால் சொர்க்கத்திலே நான் சிரிப்பதையும், பாடுவதையும், விளையாடுவதையும் தவிர எதுவுமே பண்ணல. இது போதாதா நான் சந்தோஷமா இருக்க?” என்று கேட்டது குழந்தை.
“உன்னைக் கவனிக்கிற தேவதை உனக்காகப் பாடுவாங்க, உன்னோட விளையாடுவாங்க, உன்னை மகிழ்ச்சிப்படுத்துவாங்க. அவங்க கொடுக்கிற அதிகமான அன்பும், பாசமும்தான் உன்னை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தும்” என்றார் கடவுள்.
“அன்பான கடவுளே, அவர்கள் பேசும் மொழி எனக்குத் தெரியாது, என்னால் எப்படி அவர்களைப் புரிந்து கொள்ள முடியும்?” என்று கேட்டது அந்தக் குழந்தை.
“அவங்க அன்பாகவும், நல்ல வார்த்தைகளும்தான் பேசுவாங்க. அந்த பாசமான வார்த்தைகளை நீ சொர்க்கத்தில் கூடக் கேட்டிருக்க மாட்டாய். உன்னிடம் பேச மட்டும் செய்யாமல் எப்படி மற்றவர்களிடம் சுலபமாகப் பேசுவது என்று சொல்லியும் கொடுப்பாங்க” என்றார் கடவுள்.
“உங்களோட மறுபடியும் பேசனும்னு நினைத்தால் நான் எப்படி பேசுவேன்” என்று கேட்டது குழந்தை.
“அந்தத் தேவதை உன் கைகளைப் பிடித்து எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சொல்லித் தருவாங்க. அது மட்டுமில்லாமல் என்னைப் பற்றி உனக்கு நிறையச் சொல்லி தருவாங்க. நீ எப்போது வேண்டுமோ அப்போது என்கிட்ட பிரார்த்தனை மூலம் பேசலாம்” என்று கடவுள் சொன்னார்.
“நான் கேள்விப்பட்டேன் அங்கு நிறைய கெட்ட மனிதர்கள் இருப்பார்களாமே, அப்போ அவங்கக்கிட்ட இருந்து என்னை யாரு காப்பாத்துவாங்க?” என்று கேட்டது அந்தக் குழந்தை.
அப்போது கடவுள், “கவலைப்படாதே செல்லம், அந்த நேரத்துல உன்னோட தேவதை உன்னைக் காப்பாத்துவாங்க... உனக்காக அவங்க வாழ்க்கையைக் கூடத் தியாகம் செய்யத் தயங்க மாட்டாங்க”
அந்த நேரம் பூமியில் இருந்து ஒரு சின்ன சத்தம் கேட்டது. அப்போது அந்தக் குழந்தைக்குத் தான் சொர்க்கத்தை விட்டு வெளியேப் போக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று புரிந்தது.
உடனே குழந்தை அழுது கிட்டே “அன்பான கடவுளே, நான் இப்போது அங்கே போனால் அந்த தேவதையை எப்படிக் கூப்பிடனும், அவங்க பேரு கூட எனக்குத் தெரியாது” என்று கடவுளிடம் கேட்டது.
அதற்குக் கடவுள் “அவங்க பேரு என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, நீ அவங்களை அம்மா என்றுதான் கூப்பிட வேண்டும்” என்று சொல்லிட்டுக் கடவுள் மறைந்து போனார்.
எல்லாம் கேட்டதற்குப் பின்பு, குழந்தை மிகவும் மகிழ்ச்சியுடன் பூமியில் இருக்கும் தன் அம்மாவிடம் போய்ச் சேர்ந்தது.
அம்மா மிகவும் அற்புதமானவர்கள், அம்மா எப்பொழுதும் நம்மை நன்றாகக் கவனித்து கொள்வார்கள், நம்மை பத்திரமாகப் பார்த்துக் கொள்வார்கள். இந்த உலகில் அம்மா மாதிரியான தேவதைகள் யாரும் இல்லை.