குரு ஒருவர் தன்னுடைய சீடர்களுடன் மரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது அவரைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார்.
அவர் குருவை வணங்கி விட்டு, “குருவே எனக்குக் கோபம் அதிகமாக வருகிறது. அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே, கோபத்தைக் கட்டுப்படுத்த ஏதேனும் வழி இருந்தால் கூறுங்கள்” என்று கேட்டார்.
உடனே குரு, “கோபம் என்கிறாயே, எங்கே அந்தக் கோபத்தை என்னிடம் காட்டு” என்றார்.
ஒன்றும் புரியாமல் குழம்பிப்போன அவர், “இப்பொழுது என்னிடம் கோபம் இல்லை. அதனால் உங்களிடம் காட்ட முடியாது” என்றார்.
”சரி, அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை. உனக்கு எப்பொழுது கோபம் வருகிறதோ, அப்பொழுது வந்து என்னிடம் அதைக் காட்டு” என்றார்.
அதைக் கேட்டதும் அவருக்கு உண்மையிலேயேக் கோபம் வந்து விட்டது. “கோபம் என்னிடம் இல்லை என்கிறேன், வந்தால் வந்து காட்டு என்கிறீர்கள்” என்று கோபத்துடன் கத்தினார். “எதிர்பாராத சமயத்தில் எனக்குக் கோபம் வந்தால், நான் அதை எப்படி உங்களிடம் வந்து காட்டுவது? நான் உங்களைத் தேடி வருவதற்குள் அந்தக் கோபம் என்னை விட்டுப் போய்விடாதா?” என்றார்.
“நீ சொல்வதை வைத்துப் பார்த்தால், கோபம் உன்னுடைய இயல்பு இல்லை என்று எனக்கு தெரிகிறது. மேலும், அது உன்னுடன் பிறக்கவும் இல்லை, உன் தாய் தந்தையர் அதை உனக்குத் தரவும் இல்லை. அது வெளியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். அதனால் அதை உன்னால் எளிதில் விரட்ட முடியும். கோபம் என்பது தானாக யாருக்கும் வருவதில்லை, கோபம் வர அங்கு ஏற்படும் நிகழ்வுகளும் சம்பவங்களுமே காரணமாகின்றன. எனவே, கோபம் வருவது தவறல்ல. ஆனால், நாம் அதை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் அது ஒரு குணமே தவிர இயல்பு அல்ல” என குரு கூறினார்.
வந்தவரும் கோபம் குறைந்து, தான் அப்படியேச் செய்வதாகச் சொல்லிச் சென்றார்.