டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்.
அந்த வட்டாரத்தில் அவர் கடை பிரபலம்.
ஒரு நாள் எதிர்புறமிருந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே, "நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க... தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க... இதுவே என்னைப் போலப் பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேறியிருக்கலாம்..." என்றார்.
பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்.
"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேறியிருக்கிறேன்"
"எப்படி?"
"பத்து வருஷத்துக்கு முன், நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க... அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா... உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்... நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க... மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க... இப்போ எனக்கு சொந்தமா இந்தக் கடை இருக்கு... இந்த வட்டாரத்தில் நல்ல பேர் இருக்கு... நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவேச் சிலசமயம் சம்பாதிக்கிறேன்... நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்... அவர்கள் என்னைப் போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம், நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும். ஆனால் உங்களுக்கு அப்படியில்லை... உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியேத் தர முடியாது. உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும். உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும். நீங்கள் பட்ட அத்தனைக் கஷ்டத்தையும் அவனும் படுவான். உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்... ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்.
மேனேஜர் சமோசாவுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது.