மாமன்னர் ஜனகர் ஆட்சியில் அந்தணர் ஒருவர் தவறு செய்து விட்டார்.
அவரைத் தண்டிக்கத் தீர்மானித்த ஜனகர், “நீங்கள் உடனே ராஜ்யத்தை விட்டு வெளியேறுங்கள்” என உத்தரவிட்டார்.
அதைக் கேட்ட அந்தணர், “மன்னா! உங்கள் நாட்டின் எல்லை எதுவரை என்று தெரியாது. எதுஎன்று சொன்னால், அதைத் தாண்டிச் சென்று விடுவேன்” என்றார்.
ஜனகர் மனதிற்குள், “இந்த மிதிலாபுரி முழுவதும் என் அதிகாரத்திற்கு உட்பட்டது தான்… பிறகு, ஏன் அந்தணர் இப்படி கேட்கிறார்?” என்று சிந்திக்க ஆரம்பித்தார்.
“என் அதிகாரம் இந்த அரண்மனைக்குள் மட்டும்தானே! அந்தணர் என் எல்லையைத் தாண்டி விட்டால் வேறு எங்காவது போய் பிழைத்துக் கொள்வார்… அதன் பின் அவர் மீது அதிகாரம் செலுத்த முடியாதே…!” என சிந்தித்தவர் மேலும் யோசனையைப் படரவிட்டார்.
இந்த அரண்மனைக்குள் என் அதிகாரம் செல்லும் என்று நினைத்தது கூட தவறு தான்… காரணம்,
இந்த அரண்மனைக்குள் அமர்ந்து கொண்டு, “ஜனகராகிய நான் கட்டளை இடுகிறேன்… ஏ. உடம்பே! நீ இப்படியே இளமையாக இரு!” என்று கட்டளையிட்டால், என் உடம்பு என் உத்தரவுக்கு கட்டுப்படுமா…? அடடா… என் உடம்பின் மீது கூட எனக்கு அதிகாரம் இல்லை… அப்படியிருக்க இன்னொருவரை வெளியேறச் சொல்ல எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது…” என்று கருதினார்.
மொத்தத்தில், இந்த உலகில் வாழும் எந்த மனிதனுக்கும் தனக்குத்தானே அதிகாரம் செய்து கொள்ளக்கூட அதிகாரம் இல்லை என்பது புரிந்தது.
எல்லாம் கடவுளின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதை அவர் சூசகமாகப் புரிந்து கொண்டார்.
உடனே அந்தணரிடம், “என் அதிகாரத்திற்கு உட்பட்டு, இந்த உலகில் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. ஆகையால், நீங்கள் விருப்பம் போல எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்” என்று தண்டனையை ரத்து செய்து விட்டார்.
அந்தணர் அவரிடம், “என்ன இது… இவ்வளவு பெரிய ராஜாவாக இருந்தும், உங்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறீர்களே!” என்று வியப்புடன் கேட்டார்.
மனதில் தோன்றிய அனைத்தையும் அந்தணரிடம் சொன்னார் ஜனகர்.
அப்போது அந்தணர், தர்மதேவதையாக உருமாறி நின்றார்.
“ஜனகரே! உன்னைச் சோதிக்கவே அந்தணராக வந்தேன். தவறிழைத்தது போல நாடகம் ஆடினேன். நாட்டின் எல்லை எது என்று ஒரே ஒரு கேள்வி கேட்க, அது உலக வாழ்வின் யதார்த்தத்தை உமக்கு புரிய வைத்து விட்டது. உம் போல உத்தமரை உலகம் கண்டதில்லை” என்று வாழ்த்திப் புறப்பட்டார்.
தவறு செய்தவர்களைத் தண்டிக்கக்கூடாது என்று இந்தக்கதை மூலம் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல… சாதாரண மனிதனும் கூட தன்னால் தான் உலகம் நடக்கிறது என எண்ணக்கூடாது.
கடவுளின் கட்டளைப்படியே அனைத்தும் நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால், மனதில் ஆணவத்திற்கே இடமிருக்காது.