ஒரு சமயம் தேவர்கள், அசுரர்களுக்கு இடையே போர் நடந்தது.
பிரம்மாவின் அருளால் தேவர்கள் வெற்றி பெற்றாலும், தங்களின் திறமையே வெற்றிக்கு காரணம் என ஆணவம் கொண்டனர்.
இதையறிந்த பிரம்மா திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தினார்.
நான்கு முகங்களை கொண்ட பிரம்மா, ஒரே ஒரு முகத்துடன் தேவர்களின் முன் நின்றார்.
புதியவரைக் கண்ட இந்திரன், 'வந்திருப்பது யார்? என அறிந்து வரும்படி அக்னிதேவனை அனுப்பினான்.
அருகில் வந்ததும்,'' நீ யார்? என பிரம்மா முந்திக் கொண்டார்.
''நான் தான் அக்னிதேவன். எல்லா தெய்வங்களுக்கும் என் மூலம் தான் யாகத்தீயில் பொருட்களை அர்ப்பணம் செய்வார்கள். எந்த பொருளையும் அழிக்க என்னால் முடியும்'' என்றான் கர்வமாக.
'' அப்படியா? இதோ இங்கு கிடக்கிறதே துரும்பு. இதை உன் சக்தியால் எரியச் செய்வாயா?'' என்றார் பிரம்மா.
''ப்பூ... இவ்வளவு தானா,'' என அலட்சியத்துடன் அக்னி ஊதினான்.
ஆனால் அது எரியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை.
தோல்வியை ஒப்புக் கொண்ட அவன் இந்திரனிடம் நடந்ததை தெரிவித்தான்.
அடுத்ததாக வாயுதேவனை அனுப்பினான் இந்திரன்.
அவனும் தற்பெருமையுடன், '' நான் தான் வாயு. நான் இல்லாவிட்டால் உலகில் உயிர்கள் வாழ முடியாது. எதையும் ஆட்டிப் படைக்கும் சக்தி எனக்கு உண்டு'' என்றான்.
''இதோ இந்த துரும்பை உன் சக்தியால் நகர்த்து பார்க்கலாம்'' என்றார் பிரம்மா.
''நொடியில் நகர்த்துகிறேன்'' என வாயு பெருமூச்சு விட்டான்.
அது சற்றும் அசையாததால் பலமாக ஊதினான். புயல் வீசத் தொடங்கியது.
ஆனாலும் துரும்பு நகரவில்லை. இறுதியாக இந்திரனே அங்கு வந்தான்.
அப்போது பிரம்மா மறைந்தார். அந்த இடத்தில் ஆதிபராசக்தி ஒரு பெண் வடிவில் நின்றாள்.
'பெண்ணே யார் நீ? இங்கு இருந்தவரைக் காணவில்லையே.. ?'' எனக் கேட்டான் இந்திரன்.
''அற்பனே! தேவர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் சக்திக்கு எல்லாம் ஆதாரமான ஆதிபராசக்தி நானே! போரில் வெற்றிக் களிப்பில் நீ இருக்கிறாயா?. வெற்றியோ, தோல்வியோ எந்நிலையிலும் ஒருவன் அடக்கத்தை இழப்பது கூடாது'' என அறிவுறுத்தி சுயரூபம் காட்டினாள்.
''தாயே பராசக்தி! மன்னியுங்கள் அம்மா'' என பணிந்தான் இந்திரன்.
அக்னி, வாயு உள்ளிட்ட மற்ற தேவர்களும் பராசக்தியைச் சரணடைந்தனர்.
பிரம்மாவிடம் மன்னிப்பும் கேட்டனர்.