ராவணனால் கடத்தப்பட்ட சீதை அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டாள்.
அங்கு மரத்தில் கூடு கட்டிய குளவி முட்டையிட்டு பறந்தது. கூட்டுக்குள் கிடந்த புழு தாய்க்குளவியை நினைத்தபடியே இருந்தது.
மூன்றாம் நாள் புழுவிற்கு இறக்கை முளைத்து குளவியாக மாறி பறந்தது. அதைக் கண்ட சீதை அழுதாள்.
அருகில் இருந்த அரக்கியான திரிசடை,''தாயே! ஏன் குளவியைக் கண்டு அழுகிறீர்கள்?'' எனக் கேட்டாள்.
''மூன்று நாளாக கூட்டிலிருந்த புழு, தன் தாயையே சிந்தித்து குளவியாக மாறியதை எண்ணியதும் அழுகை வந்து விட்டது'' என்றாள் சீதை.
''இதில் அழுவதற்கு என்ன இருக்கிறது?” எனக் கேட்டாள் திரிசடை.
''தாய்க்குளவியை சிந்தித்த புழு மூன்றுநாளில், குளவியானது போல, ராமனையே சிந்திக்கும் நானும் அவராகவே மாறி விடுவேனோ எனக் கவலையாக இருக்கிறது'' என்றாள்.
''கவலை வேண்டாம் தாயே! ஒருவேளை அப்படி நடந்தால், உங்களையே சிந்திக்கும் ராமரும் சீதையாக மாறிப் போவார்'' என்று சொல்லிச் சிரித்தாள்.