தேர்ந்த புத்தியுள்ளதும், தனது காரியத்தை எளிதில் தானாகவேச் சாதித்துக் கொள்ளும் திறமை படைத்த நரி ஒன்று இருந்தது.
புலி, எலி, செந்நாய், கீரிப்பிள்ளை என்ற நான்கும் அதன் நண்பர்கள். அந்தக் காட்டில் வலிமை வாய்ந்த மான்கூட்டம் ஒன்று வசித்தது. கிழப்புலியாகி விட்டதால் அந்த மான்களைப் பிடிக்க முடியவில்லை.
நரி அந்த மானை ருசிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது. அதற்கு ஒரு திட்டம் தீட்டியது.
“புலியே! உனக்கு வயதாகிவிட்டது. உன்னால் அந்த மானைப் பிடிக்கமுடியவில்லை. நம் நண்பனாகிய எலியை அதன் காலைக் கடித்துவிடச் சொல்கிறேன். அந்த மானால் வேகமாக ஓடமுடியாது. நீ சுலபமாக அடித்துக் கொன்றுவிடலாம். பின்னர் நாம் ஐவரும் அதைப் பங்குபோட்டுத் தின்னலாம்” என்றது.
எல்லோரும் இதை ஒத்துக்கொண்டார்கள்.
திட்டம் போட்டபடி எலி மானின் காலைக் கடித்தது.
விந்திவிந்தி ஓடிய மானை இலகுவாக அடித்தது புலி.
மான் செத்துக்கிடந்ததும் நரி தனது நண்பர்களிடம் ”எல்லோரும் குளித்து விட்டு வாருங்கள். இதை நான் காவல் காக்கிறேன். பின்னர் நானும் சென்று குளித்துவிட்டு வந்தவுடன் எல்லோரும் தின்னலாம்” என்று சொன்னது.
முதலில் புலி குளித்து விட்டு வந்தது.
நரி புலியைப் பார்த்து இளக்காரமாகச் சிரித்தது.
“ஏன் இப்படிக் கிண்டலாகச் சிரிக்கிறாய்” என்று கேட்டது புலி.
“இல்லை. எலி சொன்னதை நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது” என்றது நரி.
“எலி என்ன சொன்னது? சொல்” என்று காலை அடிப்பது போலத் தூக்கியது புலி.
“அது கடித்ததால்தான் வலிமையான உன்னாலேயே மானைப் பிடிக்க முடிந்ததாம். அதன் உதவி இல்லாமல் உன்னால் உன்னுடைய உணவைச் சம்பாதிக்க முடியாதாம். அதான் சிரிப்பாக வந்தது” என்றது நரி.
புலிக்கு ரோஷம் வந்துவிட்டது.
“அப்படியொன்றும் எனக்கு இந்த மான்கறி வேண்டாம். நானே அடித்து ஒரு மானைச் சாப்பிடுகிறேன்” என்று கிளம்பியது.
பின்னர் எலி வந்தது.
“எலியாரே! கீரிப்பிள்ளைக்கு மான் மாமிசம் விஷமாம். ஆகையால் அது உன்னைதான் புசிக்கப் போகிறேன் என்று என்னிடம் சொல்லிவிட்டு குளிக்கப் போனது. உனக்கு நண்பன் என்ற முறையில் சொன்னேன்” என்றது.
எலி பயந்து போய் பக்கத்திலிருந்த வளைக்குள் புகுந்து கொண்டது.
அடுத்தது செந்நாய் குளித்துவிட்டு வந்தது.
“புலி உன் மேல் பயங்கரக் கோபத்தில் உள்ளது. தனது மனைவியுடன் திரும்பி வருவதாகவும் அதன் மனைவிக்கு செந்நாய்க்கறி மிகவும் பிடிக்கும் என்று சொல்லிச் சென்றது. பார்த்துக் கொள்” என்று சொன்னது நரி.
உடம்பைச் சுருக்கிக்கொண்டு செந்நாய் ஓடிவிட்டது.
கடைசியாகக் கீரிப்பிள்ளை வந்தது.
நரி தனது காலை மடக்கி புஜபலம் காட்டுவது போலக் காட்டியது.
கீரிப்பிள்ளை சிரித்தது.
“ஏய்! இப்போதுதான் புலி, செந்நாய் எல்லோருடனும் சண்டைப் போட்டு விரட்டியிருக்கிறேன். நீயும் வா... வந்து என்னுடம் மோது. ஒரு கை பார்த்துவிடலாம். பின்னர் நீயாவது நானாவது இந்த மானைப் புசிக்கலாம்” என்று நரி கீரிப்பிள்ளையைச் சண்டைக்கு அழைத்தது.
“ஐயோ! புலி, செந்நாயையே நீ ஜெயித்து விட்டாய். நீதான் வீரன். எனக்கு இந்த மான் வேண்டாம்” என்று கீரிப்பிள்ளையும் பயந்து ஓடியது.
கடைசியில் அந்த மான்கறியை நரி இஷ்டம் போல தின்றது.