நகைச்சுவைங்கறது மனுஷனுக்கு மட்டுமே உள்ள ஒன்று. மிருகங்களுக்கு அந்த உணர்வு கிடையாது. அதுனால வருத்தம் அடைந்த விலங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, ’நமக்கும் நகைச்சுவை உணர்வு வேண்டும். அதற்காக, எல்லா மிருகங்களும் ஒரு நகைச்சுவை சொல்ல வேண்டும். அதைக் கேட்டு மற்ற எல்லா மிருகங்களும் சிரிக்க வேண்டும்’ என்று ஒரு போட்டி வைக்கப்பட்டது.
சிங்கம் அதற்குத் தலைமையேற்றது.
ஒரு மிருகம் சொல்கிற நகைச்சுவையைக் கேட்ட உடனே மற்ற விலங்குகளெல்லாம் சிரிக்க வேண்டும். அப்படிச் சிரிக்கவில்லை என்றால், நகைச்சுவை சொல்கிறற மிருகத்துக்கு ஒரு அடி கொடுக்க வேண்டுமென்பது போட்டியோட விதி.
குரங்கு முதலில் வந்து ஒரு நகைச்சுவை சொன்னது.
அதைக் கேட்டதும் மற்ற எல்லா விலங்குகளும் சிரித்தன.
ஆனால், ஆமை மட்டும் சிரிக்கவில்லை.
அதனால், குரங்குக்கு ஒரு அடி விழுந்தது.
அதற்குப் பின்பு, ஒட்டகம் வந்து ஒரு நகைச்சுவை சொன்னது.
அப்போதும் ஆமை சிரிக்கவில்லை.
அதனால், ஒட்டகத்துக்கும் ஒரு அடி விழுந்தது.
மூன்றாவதாக நகைச்சுவை சொல்லக் கரடி வந்துது.
கரடி வந்து நின்றவுடனேயே ஆமை சிரிக்க ஆரம்பித்தது.
கரடி எந்த நகைச்சுவையும் சொல்லவேயில்லை. ஆனாலும், ஆமை விடாமல் சிரித்துக் கொண்டிருந்தது. ஆமை ஏன் சிரிக்குது என்று யாருக்கும் புரியவில்லை.
உடனே சிங்கம், ஆமையைக் கூப்பிட்டு, ‘கரடி இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே. அதற்குள் ஏன் சிரிக்கிறாய்?’ என்று கேட்டது.
அதற்கு ஆமை, ‘குரங்கு முதலில் நகைச்சுவை சொன்னதை நினைச்சுச் சிரிச்சேன்’ என்றது.
இந்த மாதிரிதான் பலரும் எதை எப்பொழுது செய்ய வேண்டுமோ, அதை அப்பொழுதேச் செய்யாமல் பின்னாளில், காலங்கடந்து செய்வார்கள். அதனால் அவர்களுக்கும் கஷ்டம். மற்றவர்களுக்கும் கஷ்டம் என்பதை ஆமை போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.