சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
”முல்லா மிகவும் புத்திசாலி” என்று அரசசபையில் இருந்த பலரும் புகழ்வதைக் கேட்ட மன்னர், முல்லாவின் அறிவைச் சோதிக்க எண்ணினார்.
ஒருநாள் அரசசபை கூடிய போது, அரசசபையில் இருந்த முல்லாவை மன்னர் அழைத்து, “முல்லா, உங்கள் அறிவைச் சோதனை செய்து பார்க்க எண்ணுகிறேன். நீங்கள் ஏதேனும் ஒன்று கூறுங்கள். நீங்கள் கூறுவது உண்மையாயின் உங்கள் தலை வெட்டப்படும். பொய்யாயின் உங்களைத் தூக்கிலிடுவேன். எங்கே ஏதாவது ஒன்று கூறுங்கள்” என்றார்.
”முல்லா உண்மையைச் சொன்னாலும், பொய்யைச் சொன்னாலும் சாவது உறுதி” என்று சபையினர் வருத்தமடைந்தனர்.
முல்லா மன்னரைப் பார்த்து அமைதியுடன், “மன்னரே, நீங்கள் என்னைத் தூக்கில் போடுவீர்கள்” என்று சொன்னார்.
முல்லா கூறியதைக் கேட்ட மன்னர் திகைத்தார்.
முல்லா சொன்னது உண்மையாயின், அவருடைய தலை வெட்டப்பட வேண்டும். அவ்வாறு வெட்டப்பட்டால் அவர் கூறியது பொய்யாகிவிடும். பொய் கூறினால் தலையை வெட்டாமல் தூக்கில் போட வேண்டும். முல்லா கூறியது பொய்யாயின் முல்லாவைத் தூக்கில் போட வேண்டும். அவ்வாறு தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மையாகி விடும். உண்மையைக் கூறினால் அவரைத் தூக்கில் போடாமல் தலையை வெட்ட வேண்டும்.
முல்லாவின் புத்திசாலித்தனமான பதிலைக் கேட்ட மன்னர் பாராட்டினார். சபையினர் அனைவரும் முல்லாவின் புத்திசாலித்தனத்தை வியந்ததுடன் பாராட்டி மகிழ்ந்தனர்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.