ஜஹாங்கீர் மாமன்னரின் அன்பு மனைவி நூர்ஜஹான். மிகச் சிறந்த அழகி மட்டுமல்ல, அறிவாற்றலும் செயல்திறனும் நிர்வாகத் திறமையும் நிறைவாக வாய்க்கப்பெற்றவர். ஜஹாங்கீர் ஆட்சி செய்து வந்தார் என்ற போதிலும் உண்மையாக ஆட்சியை நடத்தி வந்தவர் அவர் மனைவி நூர்ஜஹான்தான் என்று கூறினால் அஃது மிகையில்லை.
ஒரு நாள் அரண்மனைத் தோட்டத்தில் வில் வித்தை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எய்த அம்பு வேகமாக மதில் சுவரைத் தாண்டி வெளியேச் சென்றது. அப்போது அவ்வழியே சென்று கொண்டிந்த சலவைத் தொழிலாளி ஒருவர் உடலில் பாய, அவர் அங்கேயேப் பிணமாகச் சாய்ந்தார்.
இந்தக் கொலை வழக்கு சக்கரவர்த்தியின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. கொலைக் குற்றவாளியாக அவர்முன் அவரது அன்பு மனைவி நூர்ஜஹான் நிறுத்தப்பட்டார்.
வழக்குமன்ற விசாரணைக்குப் பின் ஷரீயத் சட்ட அடிப்படையில் தன் மனைவியென்றும் பாராமல் மரணதண்டனை விதிக்கிறார் மாமன்னர் ஜஹாங்கீர்.
ஒருவரைக் கொன்றுவிட்டால், கொன்றவர் மரண தண்டனைக்கு உட்பட வேண்டும் என்பது ஷரீயத் சட்டம். ஆனால், அவரைச் சுற்றியிருந்த அரசு அதிகாரிகளுக்கு இத்தீர்ப்பு அதிர்ச்சியளித்தது.
தன் அன்பு மனைவி, தன்னைவிட ஆற்றலுள்ள பெண்மணி, அரசுக்கு வழிகாட்டியாக விளங்கவல்ல திறனாளி மரண தண்டனை பெறுவதை விரும்பவில்லை. ஏதேனும் ஒரு வகையில் தண்டனையைக் குறைக்கச் செய்யுமாறு மாமன்னரை வேண்டுகின்றனர்.
இஸ்லாமிய நீதி காப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்த ஜஹாங்கீர் மாமன்னர், “சட்ட அறிவு நிறைந்த முஸ்லிம்களையும், இஸ்லாமிய ஞானமிக்கவரையும் ஒருசேர அழைத்து ஷரீயத் சட்டப்படி ஏதேனும் விதி விலக்கு அளிக்க முடியுமா?” என ஆராயச் சொன்னார். “விதி விலக்கு இல்லையெனில் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்” எனக் கூறினார்.
ஷரீயத் சட்ட நுணுக்கங்களையெல்லாம் அலசி ஆராய்ந்த போது, “யார் கொல்லப்பட்டாரோ, அவருடைய அடுத்த வாரிசு, கொன்றவர்க்கு மரண தண்டனை கொடுக்க வேண்டாம், அத்தண்டனைக்குப் பரிகாரமாக பிணையத் தொகை கொடுத்துவிட்டால், மரண தண்டனை பெற்ற தண்டனையாளியை விடுதலை செய்து விடலாம்” என்ற விதி விலக்கை எடுத்துக் கூறினார்கள்.
உடனே மன்னர் ஒரு கட்டளையைப் பிறப்பிக்கிறார்.
“ஆட்சியாளர்கள் யாரும் இறந்தவரின் வாரிசான அவர் மனைவியை அணுகி பிணையத் தொகையைப் பெற்றுக் கொண்டு அரசிக்கு விடுதலை வழங்குமாறு எக்காரணம் கொண்டும் கோரக் கூடாது. அந்தப் பெண்ணாக முன்வந்து யாருடைய வற்புறுத்தலும் இல்லாது, “பிணையத் தொகையை வாங்கிக் கொண்டு கொலையாளியை விடுவிக்கிறேன்” எனக் கூறினால் மட்டுமே கொலையாளிக்கு விடுதலைச் சலுகை வழங்க முடியும்” எனக் கூறிவிட்டார்.
இக்கட்டளையின் விளைவாக, அரசு காவலர்கள் யாருமே இவ்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. எனினும், பொதுமக்களில் சிலர் சலவைத் தொழிலாளியின் மனைவியிடம் சென்று, “எதிர்பாரா நிலையில் உன் கணவன் இறக்க நேரிட்டது. அரசி வேண்டுமென்று இக்கொலையைச் செய்யவில்லை. மன்னரால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அரசியை மன்னித்து விட்டதாகவும் பிணையத் தொகை தந்தால் போதும் என்று நீ கூறினாலொழிய அரசி கொலைத் தண்டனையிலிருந்து மீள வழியேயில்லை” எனக் கூறி வேண்டினர்.
மனமிரங்கிய இறந்த சலவைத் தொழிலாளியின் மனைவி மன்னரிடம் சென்று, 'பிணையத் தொகை போதும், அரசியை மன்னிக்கிறேன்” எனக் கூற, மன்னரும் அரசிக்குத் தண்டனையில் இருந்து விலக்கு அளித்தார்