அதிக வரி வாங்கி நாட்டு மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான் அந்நாட்டு அரசன்.
மக்கள் அனைவரும் ஒன்று கூடித் தங்கள் மேல் கருணை காட்டுமாறு அரசனை மிகவும் மன்றாடி வேண்டினர்.
மறுநாள் அரசன் குடிமக்கள் அனைவரையும் அழைத்து, “தங்கள் கோரிக்கைகளைப் பற்றிச் சிந்தித்தேன். இன்று முதல் நீங்கள் அனைவரும் வந்து, அரண்மனையிலிருந்து ஒரு மூட்டை நெல் எடுத்துக் கொண்டு போக வேண்டும். ஒரு மூட்டை அரிசியாகத் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும். இது என்னுடைய உத்தரவு” என்றான்.
இதனால் மிக வருந்திய நாட்டு மக்கள் புலம்பவும், அரசனைத் திட்டவும் ஆரம்பித்தனர்.
இது அரசன் காதுக்கும் எட்டியது.
சிறிது காலம் கழித்து அரசன் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில், தான் குடிமக்களுக்குச் செய்த தவறுகளுக்கு வருந்தி, தன் மகனை அழைத்து, “நான் மக்களை மிகவும் வருத்தி வரிகளை வாங்கிக் கெட்ட பெயர் எடுத்தேன். நீ இனிமேல் அப்படி நடக்கக் கூடாது. எனக்கு நல்ல பெயர் வரும்படி நடந்துகொள்ள வேண்டும்” என்று பலவாறு புத்திமதிகள் சொல்லி உயிர் துறந்தான்.
இளவரசன் ஆட்சிக்கு வந்ததும், குடிமக்களைக் கூட்டினான்.
“என் தந்தையின் வேண்டுகோளை நான் எப்படியாவது நிறைவேற்றியாக வேண்டும். ஆகவே என் மேல் வருத்தப்படாதீர்கள்” என்று சொல்லி, “நாளை முதல் குடிமக்கள், அரண்மனையிலிருந்து ஒரு மூட்டை உமி எடுத்துக் கொண்டு போய், அதற்குப் பதிலாக ஒரு மூட்டை அரிசி கொண்டு வந்து இங்குப் போடவேண்டும். இன்று முதல் இது புது உத்தரவு” என்று கூறினான்.
அதைக் கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து, “ஐயோ அந்தப் புண்ணியவானே தேவலையே! நெல் கொடுத்து அரிசி கேட்டான். இந்தப் பாவி உமியைக் கொடுத்து அரிசி கேட்கிறானே?” என்று இறந்த அரசனைப் புகழ்ந்து இளவரசனை இகழத் தொடங்கினர்.
இளவரசனும் நாம் தந்தையின் சொல்லை நிறைவேற்றி விட்டோம் என்று மகிழத் தொடங்கினான்.