அயோத்தியில் ராமபிரான் தன் நாட்டு மக்களின் மனநிலை அறிய விரும்பினார். ஆகவே, ஒரு நாள் அவர் சாதாரண மனிதனைப் போல, தம்பி லட்சுமணனையும் உடன் அழைத்துக் கொண்டு ஊரை வலம் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் ஒரு காட்சியினைக் கண்டார்.
பசுமை நிறைந்த வனத்தின் ஓரத்தில் ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அங்கேப் பல நாடுகள் கடந்து வந்த வெளியூரைச் சேர்ந்த துறவி ஒருவர் புதிதாக வந்திருந்தார். துறவி ஆற்றில் நன்றாக அமிழ்ந்து ஸ்நானம் செய்தார். ஆச்சார - அனுஷ்டானங்களை முடித்து, பிறகு பையில் இருந்து சமித்துக்களை எடுத்துத் தீ வளர்த்தார்.
அவர் ஹோமம் செய்யப் போகிறார் என்று நினைத்த ராமபிரானுக்கு மாறுபட்ட செயல் நடந்தது.
அந்தத் துறவி இரண்டு பாத்திரங்களை எடுத்து, அவற்றில் நீரை நிறைத்து, மற்றொன்றில் மாவைப் போட்டு நீரைத் தெளித்துப் பிசைந்து அந்த மாவினால் ஆறு ரொட்டிகளைச் செய்தார்.
முதல் இரண்டு ரொட்டியில் நெய்யைத் தடவியும், இரண்டில் தேனைத் தடவியும், மீதி இரண்டில் ஊறுகாயைத் தடவியும் தீயில் வாட்டினார். பிறகு, கரையில் அமர்ந்து ஜபம் செய்தார். சிறிது நேரம் கழித்துக் கண் விழித்தார்.
துறவி ரொட்டித் தட்டை எடுத்தார். அந்த நேரத்தில், அவ்வழியாக ஓர் ஊனமுற்றவர் சென்று கொண்டிருந்தார். துறவி அவரை அழைத்து, ஊறுகாய் தடவிய இரண்டு ரொட்டிகளைக் கொடுத்தார்.
அடுத்த நான்கு ரொட்டிகளில் தேன் தடவிய இரண்டு ரொட்டிகளை எடுத்தார். அப்போது, அவ்வழியாக வந்த சிறுமிக்குக் கொடுத்தார்.
அடுத்து நெய் தடவியதை எடுத்தார், ஆற்றில் மீன்களுக்கு இரண்டு ரொட்டிகளை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப் போட்டுவிட்டு மூட்டையைப் பழையபடியேக் கட்டி வைத்துவிட்டு அடுப்பில் இருந்த சாம்பலை எடுத்துத் தண்ணீரில் கரைத்து மடமடவென்று அருந்திவிட்டு, அந்தக் கிண்ணத்தைப் பையில் வைத்துவிட்டு, யாத்திரைக்குப் புறப்பட்டார் அந்தது துறவி.
அந்தக் காட்சியை கண்ட ராமபிரான் ஆச்சரியப்பட்டு, விபரம் புரியாமல் அவரை நெருங்கி, "சுவாமி, நீங்கள் செய்த மூன்று வகையான ஆறு ரொட்டிகளையும் மூன்று விதமான தானம் செய்து விட்டீர்கள். பிறகு, அடுப்பு சாம்பலை நீரில் கரைத்து அருந்திவிட்டுப் பயணம் செய்யப் புறப்பட்டுவிட்டீர்கள். நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று புரியவில்லை? எனக்கு இது பற்றிச் சொல்லுங்கள்” என்று வேண்டினார்.
"ஆமாம் அப்பா, நான் ஸ்நானம் செய்த பின் ஜபம் செய்யும் போது, இரண்டு ரொட்டியைத் தேன் தடவியும், இரண்டை நெய்யைத் தடவியும், சாப்பிட வேண்டும் என்று மனம் விரும்பியது. அதைத் திருப்திபடுத்தவே அந்த ரொட்டிகளைச் செய்தேன்” என்றார் துறவி.
“பிறகு, ஏன் சுவாமி நீங்கள் அவற்றை உட்கொள்ளவில்லை?” என்று ராமர் கேட்டார்.
“துறவியாகிய நான் எல்லா புலன்களையும் அடக்கிவிட்டேன். ஆனால், மனதை மட்டும் வெல்லச் சிறிது சிரமப்பட்டேன். அதன் விளைவாகவே, ரொட்டி செய்தேன். மனதைச் சமாதனப்படுத்திவிட்டேன். சாம்பலாகப் (மண்ணாக) போகும் இந்தச் சரீரத்திற்குள் இருந்து கொண்டு, உடன் பிறந்தேக் கொல்லும் வியாதியைப் போல நான் கூறுவதைக் கேட்காமல் என் பாழ் மனமே, இன்று உனக்கு இந்தச் சாம்பல்தான் ஆகாரம் என்று மனத்திற்குத் தண்டனை அளித்தேன்” என்று விளக்கம் கூறினார்.
இதன் மூலம், சலனப்படும் மனதை அடக்கினால் ஆசை நீங்கப் பெறும் என்பதை உணராலாம்.