ஒரு கூட்ட அரங்கில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது, பேச்சாளர் அனைவருடையக் கையிலும் ஒரு பலூனைக் கொடுத்து, தங்கள் பெயரை எழுதச் சொன்னார்.
எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் நிரப்பச் சொன்னார்.
அதன் பிறகு, அந்தப் பேச்சாளர், “உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள்” என்றார்.
உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து, தங்கள் பெயர் இருக்கிறதா? என்று தேடினர்.
ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து, தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாகத் தேடினர். பத்து நிமிடங்கள் கடந்து விட்ட போதிலும், ஒருவராலும் தங்களுக்குரிய பலூனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதனைக் கண்ட அந்தப் பேச்சாளர் சொன்னார், “ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள். அந்தப் பலூனில் யார் பெயர் இருக்கிறதோ, அதை அந்தப் பெயருடைய நபரிடம் கொடுங்கள்” என்றார்.
அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்து விட்டது.
அப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், “இது தான் வாழ்க்கை. எல்லோரும் மகிழ்ச்சியைத் தேடுகிறோம், ஆனால், அது எங்கே?, எப்படி?, எதில் கிடைக்கும்? என்று நினைப்பது இல்லை”
நம் மகிழ்ச்சி, அடுத்தவர்களுக்கு உதவுவதில்தான் இருக்கிறது. அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுங்கள், உங்களுக்கான மகிழ்ச்சி உங்களைத் தானாகத் தேடி வரும்.