ஒரு சமயம் பாண்டிய நாட்டின் அரசராக வரதுங்கராம பாண்டியன் என்பவர் இருந்தார். அவருடைய தம்பி அதிவீரராம பாண்டியன் ஆவார்.
இருவருமேக் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினர். நல்லுணர்வு உடையவர்களாக இருந்தனர். பல நல்ல நூல்களை இயற்றினர்.
என்ன காரணமோ தெரியவில்லை? தன் தமையனார் மீது பகை கொண்டார் அதிவீரராம பாண்டியர், பெரும்படை திரட்டிய அவர் வரதுங்கராம பாண்டியர் மீது படையெடுத்துச் சென்றார்.
தம்பியின் மீது அன்பு கொண்டிருந்த வரதுங்கராம பாண்டியரோ, எதிர்த்துப் போர் செய்யவில்லை. மாறாக அவர் தம்பிக்கு ஓர் ஓலை அனுப்பினார்.
அதிவீரராம பாண்டியர் அந்த ஓலையைப் பிரித்துப் பார்த்தார்.
அதில், "அண்ணனைக் கொல்ல முயன்ற சுக்ரீவன், விபீஷணன், அர்ஜுனன் போன்றவர்களைப் போல் இருக்காதே. அண்ணன் - தம்பி எனும் சகோதரப் பாசத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்த பரதனையும் ராமனையும் போல இரு’’ என்ற கருத்தமைந்த ஒரு பாடல் இருந்தது.
அந்தப் பாடல் அதிவீரராம பாண்டியரின் உள்ளத்தைச் சுட்டது.
அண்ணனைச் சந்தித்த அவர், "என் பிழையைப் பொறுத்தருள வேண்டும்’’ என்று உள்ளன்புடன் வேண்டினார்.