நேர்மையும் அறப் பண்புகளும் கொண்டவர் தர்மர். கௌரவர்கள் சூழ்ச்சி செய்து தர்மரை சூதாடும்படி செய்தார்கள். சூதாட்டத்தில் தோல்வியுற்ற அவர், தன் மனைவியுடனும் சகோதரர்களுடனும் வனவாசம் சென்றார். காட்டில் அவருக்கு எண்ணற்ற சோதனைகள் வந்தன. பசியாலும் பட்டினியாலும் துன்பப்பட்டார் அவர்.
அந்தச் சோதனைக் காலத்திலும் அவர் இறைவனை வழக்கம் போல் வழிபட்டார்.
“எப்படி உங்களால் இந்தச் சூழலிலும் இறைவனை அன்போடு வழிபட முடிகிறது?" என்று கேட்டாள் அவர் மனைவி.
“என் அன்பு மனைவியே! பனி படர்ந்த இந்த இமயமலையைப் பார், எவ்வளவு அழகாகக் காட்சி அளிக்கிறது! நான் அதனிடம் அன்பு செலுத்துகிறேன். அது நமக்கு ஏதேனும் தருகிறதா? இல்லை. அழகாக இருப்பதால் அதை நேசிக்கிறேன். அதேப் போலத்தான் நான் இறைவனிடம் அன்பு செலுத்துவதும்... அவரே எல்லா அழகும் நிறைந்தவர்; நற்பண்புகளுக்கு நிலைக்களம் ஆனவர்; அன்பு செலுத்தக்கூடிய சிறந்த பொருளாக இருப்பவர். அதனால் அவரிடம் நான் அன்பு செலுத்துகிறேன். நான் அவரிடம் எதையும் கேட்டு வழிபடுவதில்லை. என்னை அவர் எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும், எனக்கு அவர் எவ்வளவு துன்பங்கள் வேண்டுமானாலும் தரட்டும். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் அவரிடம் அன்பு செலுத்திக் கொண்டே இருப்பேன்” என்று பதில் தந்தார் அவர்.