ஒரு பெரிய அரசன் இருந்தான். அவனுக்கு நூறு வயது ஆயிற்று.
வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியதை யெல்லாம் அவன் அனுபவித்துவிட்டான்.
ஒரு நாள் மரணம் அவனைத் தேடி வந்தது.
“இதோ பாரப்பா... உனக்கு நேரம் வந்து விட்டது ... உன்னை அழைத்துக் கொண்டு போகத்தான் நான் வந்திருக்கிறேன். புறப்படு!” என்று மரணம் அரசனிடம் கூறியது.
இவன் பெரிய ராஜாதான்... போர்களில் வீரத்தையெல்லாம் காட்டியிருக்கிறான். இருந்தாலும் இப்போது நடுங்க ஆரம்பித்தான்.
"என்ன... இவ்வளவு சீக்கிரமாக வந்து விட்டாய்? நான் ஒரு நூறு வருஷம்தானே இதுவரை வாழ்ந்து முடித்திருக்கிறேன்... அதற்குள் என்னை அழைத்துக் கொண்டு போவதற்கு வந்துவிட்டாயே!” என்றான்.
"என்னப்பா இப்படிச் சொல்கிறாய்? உன் பிள்ளைகளெல்லாம் தாத்தாவாக ஆகி விட்டார்கள். இன்னும் உனக்கு இந்த உலகத்தில் என்ன வேண்டியிருக்கிறது?" என்று அந்த மரணம் கேட்டது.
அந்த ராஜாவுக்கு நூறு மனைவிகள், நூறு பிள்ளைகள், அதனால் அவன் ஒரு யோசனை செய்தான்... பிறகு சொன்னான்:
"இதோ பார்..... நீ வந்துவிட்டாய்.... வெறுங்கையோடு நீ திரும்பிப் போகமாட்டாய் என்று எனக்குத் தெரியும். என் பிள்ளைகள் நூறு பேர் இருக்கிறார்கள். அவர்களிடம், 'எனக்குப் பதிலாக நீங்கள் யாராவது நகர போகிறீர்களா?' என்று கேட்டுப் பார்க்கிறேன். அவர்களில் யாராவது ஒருவரைச் சம்மதிக்க வைத்து உன்னுடன் அனுப்புகிறேன். என்னை இன்னும் ஒரு நூறு வருடம் வாழவிட்டுவிடேன்!” என்று கேட்டுக் கொண்டான்.
அதற்கு மரணம், “உனக்குப் பதிலாக யாராவது ஒருவர் என்னோடு வந்தால் போதும். இருந்தாலும் நீ எல்லோருக்கும் அப்பா... எல்லோரையும் விட நீதான் அதிக நாள் வாழ்ந்திருக்கிறாய்... எல்லாவற்றையும் அனுபவித்திருக்கிறாய். அப்படி இருக்கும்போது நீயே இப்படி இருந்தால் உன் பிள்ளைகள் எப்படி என்னுடன் வர சம்மதிப்பார்கள்?" என்று மரணம் கேட்டது.
இருந்தாலும் அந்த ராஜாவுக்கு நம்பிக்கை இருந்தது.
தன் பிள்ளைகளை ஒவ்வொருவராகக் கூப்பிட்டான். கேட்டுப் பார்த்தான். மூத்த பிள்ளைகளெல்லாம் ஒன்றும் பேசவில்லை. அவர்கள் பேசாமல் நழுவிப் போக ஆரம்பித்தார்கள்.
கடைசி மகன் ஒருவன். அவனுக்கு 16 வயதுதான் ஆகியிருந்தது. அவன் முன்னால் வந்து, "நான் தயார்... என்னை அழைத்துக் கொண்டு போ!” என்று மரணத்திடம் கூறினான்.
அவனைப் பார்த்ததும் மரணமே இரக்கப்பட ஆரம்பித்தது.
அது அவனிடம். "என்னப்பா இது! நீ ஒன்றும் தெரியாதவனாக இருக்கிறாயே.... உன்னை விடப் பல மடங்கு வயது அதிகமான உன்னுடைய மூத்த சகோதரர்கள் 99 பேர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் இன்னும் இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். நீ இப்படிச் சொல்கிறாயே... நன்றாக யோசித்து சொல்!” என்று கூறியது.
அதற்கு அவன், “நான் நன்றாக யோசித்துத்தான் சொல்கிறேன். எங்கள் அப்பா நூறு வருடங்கள் வாழ்ந்திருக்கிறார். அப்படியும் அவர் திருப்தியடையவில்லை. என் சகோதரர்களெல்லாம் என்னை விட அதிகக் காலம் இந்த உலகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் திருப்தி ஏற்படவில்லை. இதைப் பார்க்கும் போது எனக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரிகிறது: அதாவது, நான் நூறு வருடம் வாழ்ந்தாலும் கூட, எனக்கும் திருப்தி ஏற்படப் போவதில்லை. அப்படி இருக்கும் போது நான் இப்போது போனால் என்ன? இன்னும் 90 வருடம் கழித்துப் போனால் என்ன? பேசாமல் என்னை உன்னுடன் அழைத்துக் கொண்டு போ!" என்று தெரிவித்தான்.
மரணம் அந்தப் பையனை அழைத்துக் கொண்டு போயிற்று. அதற்கு பிறகு ஒரு நூறு வருடம் கழித்து அந்த மரணம் மறுபடியும் திரும்பி வந்தது. அந்த ராஜாவைப் பார்த்தது.
இப்போதும் அந்த ராஜா அதே பழைய நிலையில்தான் இருந்தான். இப்போது அவன் என்ன சொன்னான் தெரியுமா?
"இந்த நூறு வருடம் போனதே எனக்குத் தெரியவில்லை. அவ்வளவு வேகமாகப் போய் விட்டது. என்னால் நிதானமாக உலக வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை. என்னுடைய வயதான பிள்ளைகளெல்லாம் ஏற்கெனவே இறந்து போய்விட்டார்கள். இப்போது எனக்கு இன்னொரு தலைமுறை வந்திருக்கிறது. இப்போது எனக்குப் பதிலாக இன்னொருவனை அனுப்புகிறேன்... அவனை அழைத்துக் கொண்டு என்னை இன்னும் ஒரு நூறு வருடம் வாழ விடேன்!" என்று கேட்டுக் கொண்டான்.
அதற்கும் மரணம், “சரி” என்று கூறி வேறு ஒருவனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போயிற்று.
இப்படியே ஒன்பது தடவை நடந்தது.
இப்படியே அந்த ராஜா தொள்ளாயிரம் வருடம் அதிகமாக வாழ்ந்தான்.
பத்தாவது தடவையாக மரணம் வந்து நின்றது. அப்போது அவன் சொன்னான்:
"நீ முதல் தடவை வந்தபோது நான் எப்படி உலக இன்பங்களில் திருப்தி அடையாதவனாக இருந்தேனோ, அதே நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். இப்போதும் எனக்கு உன்னுடன் வர விருப்பம் இல்லை. இருந்தாலும் வருகிறேன். ஏனென்றால், திருப்பித் திருப்பி எத்தனை தடவைதான் உன்னிடம் சலுகை கேட்பது? இதுவரை கேட்டதே மிகவும் அதிகம். இருந்தாலும் ஒரு விஷயத்தை இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டேன்: ஓர் ஆயிரம் வருடத்தில் என்னால் திருப்தியடைய முடியவில்லையானால், பத்தாயிரம் வருடம் இந்த உலகத்தில் வாழ்ந்தால் கூட என்னால் திருப்தியடைய முடியாது! புறப்படு.... போகலாம்!" என்றான்.
நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உலக வாழ்க்கையும் இப்படித்தான், இதை நாம் புரிந்து கொண்டால், நம் வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமையும்.