காளமேகப் புலவர் வைணவர். பிறகு ஒரு காலத்தில், அவர் சைவ சமயத்திற்கு மாறிவிட்டார். அதனால் வைணவர்களுக்கு அவர் மேல் தீராத கோபம், பகை.
ஒரு சமயம் அவர் திருக்கண்ணபுரம் என்ற வைஷ்ணவ தலத்திற்குச் சென்றார். அங்கே புகழ் பெற்ற பெருமாள் கோயில் உண்டு.
வைணவர் நிறைந்த அந்த ஊருக்குக் காளமேகம் சென்ற சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. ஆதலால் அவர் அந்தப் பெருமாள் கோயிலில் ஒதுங்குவதற்காக ஓடினார்.
கோயிலில் இருந்த பட்டாசாரியர்கள், 'மதம் மாறிய சண்டாளனுக்கு இங்கே இடமில்லை' என்று சொல்லிக் கோயில் வாசற் கதவைச் சாத்திவிட்டார்கள்.
மழை கொட்டிக் கொண்டிருந்தது. அதைக் கூடக் காளமேகம் பெரிதாக நினைக்கவில்லை.
இந்த மனிதர்கள் மதத்தைப் பெரிதுபடுத்தி அதன் மீது பித்துக் கொண்டிருப்பதைக் கண்டு வருந்தினார்.
அவர்களின் மதப்பித்தைத் தெளியவைக்க நினைக்க, படபட என்று கதவைத் தட்டி ஓசைப்படுத்தினார்.
'கண்ணபுரமாலே கடவுளிலும் நீயதிகம்' என்று உரக்கக் கத்தினார்.
உள்ளே இருந்தவர்கள் அதைக் கேட்டு, 'இப்போதுதான் காளமேகத்திற்குப் புத்தி வந்திருக்கிறது; இனி மீண்டும் வைணவனாக மாறிவிடுவான்' என்று தீர்மானித்துக் கதவைத் திறந்தார்கள்.
கோயிலுக்குள் சென்ற காளமேகமோ, 'உன்னிலுமே யானதிகம்' என்று அடுத்த அடியைப் பாடினார்.
பட்டாசாரிகள், 'இவன் நம்மிடமே குறும்புத்தனத்தைக் காட்டிவிட்டானே!' என்று கலங்கினார்கள்.
ஆனால், காளமேகம் எதற்கும் பயப்படக் கூடியவர் அல்லவே? பாடலை முழுவதுமாகப் பாட ஆரம்பித்தார்.
"கண்ணபுரமாலே கடவுளிலும் நீயதிகம்
உன்னிலுமே நானதிகம் ஒன்றுகேள் - முன்னமே
உன் பிறப்போ பத்தாம் உயர்சிவனுக்கொன்றுமில்லை
என் பிறப்பு எண்ணத் தொலையாதே!"
கடவுளாகிய சிவபெருமானுக்குப் பிறப்பு இறப்பு எதுவுமே கிடையாது. பெருமாளே! சிவனோடு ஒப்பிடும் போது பத்து முறை பிறந்திருக்கிற நீ பெரியவன்தான்! அதில் எள்ளவும் சந்தேகமில்லை. ஆனால் என் பிறப்பின் எண்ணிக்கை எத்தனை? என்று எனக்குத் தெரியாது; எண்ணியும் மாளாது. ஆதலால் பத்துப் பிறவிகள் எடுத்த உன்னைக் காட்டிலும், எண்ண முடியாத பல பிறவிகள் எடுத்து வருகிற நானே உன்னை விட உயர்ந்தவன் ஆவேன் - என்பது கவி காளமேகத்தின் கருத்தாகும்.