ஓர் அரசன் தன் அமைச்சரை அழைத்தான். "அமைச்சரே, சொர்க்கம் எப்படி இருக்கும்? நரகம் எப்படி இருக்கும்? சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் நாம் போவதற்குக் காரணம் நாமேயா, அல்லது கடவுள் நம்மை அனுப்புகிறாரா?'' என்று கேட்டான்.
அப்படிக் கேட்டதோடு மட்டும் அவன் நிறுத்திக் கொள்ளவில்லை. “நாளைக்கு நீங்கள் எனக்குத் தெளிவாக இதை விளக்கவில்லையென்றால் உங்களைச் சிறையில் அடைப்பேன்'' என்றும் மிரட்டினான்.
பாவம் மந்திரி! இந்தக் கேள்விக்கு அவரால் எப்படிப் பதில் கூற முடியும்? அவர் என்ன, சொர்க்கத்தையும் நரகத்தையும் நேரிலா பார்த்திருக்கிறார்!
அவர் ஆழ்ந்த சிந்தனையின் வயப்பட்டிருப்பதை அவருடைய ஒரே மகள் பார்த்தாள். அவள் மனம் அவரது அமைதியற்ற நிலையை உணர்ந்தது. அவள் வருந்தினாள்.
தந்தையினிடம் காரணத்தைக் கேட்டாள்.
அமைச்சர் தமது தொல்லையை அவளிடம் எடுத்துரைத்தார்.
மகள் சிந்தித்தாள், சிரித்தாள். பிறகு அவள் அமைச்சரிடம் ஒரு வழியைக் கூறினாள்.
மறுநாள் சபை கூடியது. அமைச்சரும் அங்கு வந்தார்.
அரசனை ஒரு பெரிய கூடத்திற்கு அழைத்துச் சென்றார் அமைச்சர். அந்தக் கூடம் இரண்டாகத் தடுத்திருந்தது.
முதற் பகுதியில், தலைவாழையிலைகள் போட்டிருந்தன. அவற்றில் ஜாங்கிரி, குலோப்ஜாமுன், ரசகுல்லா, போளி இன்னும் வகை வகையான இனிப்புகள், காரங்கள், மற்றும் உணவு வகைகள் படைக்கப் பெற்றிருந்தன.
இலைகளின் எதிரில் அமர்ந்திருந்த மனிதர்கள்தாம் பாவம்! அவர்கள் கண்களில் பசியின் ஏக்கம் துளும்பியது. ஆனால், அவர்களால் அந்த ருசி மிக்க தின்பண்டங்களைத் தொடக் கூட முடியவில்லை.
ஒவ்வொருவரின் முன் கையிலும் ஓர் அடி நீளத்திற்கும் மேலாக நீட்டிக் கொண்டிருக்கும்படி ஒரு கரண்டி கட்டியிருந்தது. அதைக் கொண்டு உணவை எடுக்கலாம்; ஆனால், வாயில் எப்படிப் போட்டுக் கொள்வது?
அதே சமயம், 'குனிந்து வாயால் கவ்வி உண்ணக்கூடாது' என்றும் கட்டளை இடப்பட்டிருந்தது. அவர்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.
அரசனும் அமைச்சரும் கூடத்தின் மறு பகுதிக்குச் சென்றனர்.
அங்கும் இலைகள் போட்டு உணவு வகைகள் பரிமாறப் பெற்றிருந்தன. அமர்ந்திருந்தவர்களின் கைகளில் கரண்டிகள் கட்டியிருந்தன. ஆனால், அவர்கள் பசியால் தவிக்கவில்லை.
ஒவ்வொருவனும் தன் கரண்டியால் உணவை எடுத்து, அடுத்தவன் வாயில் ஊட்டிக் கொண்டிருந்தான். தானாக உண்பதை விட அதிக மகிழ்ச்சியை அவர்கள் அடைந்தனர்.
"அரசே! சொர்க்கம் நரகம் என்பவை கடவுள் படைத்தவை அல்ல. அவற்றுக்கு நம்மைத் தெய்வம் அனுப்பி வைப்பதும் இல்லை. சுயநலத்தினாலும் பேராசையினாலும் நாமே உருவாக்கிக் கொண்டு துயரவயப்படுவதுதான் நரகம். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, தயை, முயற்சி இவற்றினால் உருவாக்கிக் கொண்டு நாம் மகிழ்வதுதான் சொர்க்கம்'' என்று அமைச்சர் சொன்னார்.
வேண்டாத சிந்தனையினால் அமைச்சரை வருத்தியதற்காக அரசன் வெட்கமும் வேதனையும் அடைந்தான்.
கூடத்தின் நடுவே இருந்த மறைப்பு எடுக்கப்பட்டது. அவர்களும் எல்லோரோடும் சேர்ந்து அமர்ந்து விருந்து சாப்பிட்டனர்.
ஏழைமக்களுக்கு அந்த நாள் ஒரு பொன்னாளாயிற்று. அரசனுடனும் அமைச்சருடனும் சமமாக உட்கார்ந்து அறுசுவை உண்ணும் வாய்ப்பு, தினமுமா கிடைக்கும்!