அழகான அந்தக் கொக்கு, தன் சிறகுகளை விரித்து வீசிக்கொண்டு கம்பீரமாகப் பறந்தது. நெடுந்தூரம் பறந்த களைப்பைப் போக்கிக் கொள்ள அது ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டது. தன்னை அறியாமலே அது எச்சமிட்டது.
அந்த மரத்தினடியில் ஒரு முனிவர் தியானம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தலையில் பறவையின் எச்சம் 'சொட்'டென விழுந்தது. தியானம் கலைந்து விழித்த முனிவரின் உடல் நடுங்கியது. அவர் நிமிர்ந்து பார்த்தார்.
மனிதனுக்கு அறிவு வளர வளர அடக்கமும் பொறுமையும் வளர வேண்டும். இல்லாவிட்டால் உலகம் அவனைப் புகழ்வதற்குப் பதிலாக, அகம்பாவி என்று இகழ்ந்து பழிக்கும்.
அந்த முனிவர் தமது ஞானத்தை மறந்தார்; நிதானத்தை இழந்தார்; கோபத்தோடு அந்தக் கொக்கை விழித்துப் பார்த்தார்.
தவத்தினால் சக்தி வாய்ந்திருந்த அவருடைய பார்வையின் வெம்மையில் அந்த அழகிய கொக்கு, பாவம்! எரிந்து சாம்பலாகிவிட்டது.
முனிவர் பரிதாபப்படவில்லை. அதற்கு மாறாக, "ஆகா! சிவபெருமான் தமது மூன்றாவது கண்ணைத் திறந்துதான் திரிபுரத்தை எரித்தார். ஆனால் நானோ! என் ஊனக் கண்களைக் கொண்டே கொக்கை எரித்துவிட்டேன்! என்னே என் தவவலிமை!" என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.
அன்று இரவு முனிவருக்குக் கடும் பசி. அருகில் இருந்த கிராமத்திற்குச் சென்றார். ஒரு வீட்டின் வாயிலில் நின்று கொண்டார். "பவதி பிக்ஷாம் தேஹி” என்று குரல் கொடுத்தார்.
வீட்டிற்குள் ஒரு பெண்மணி, களைப்புடன் வந்திருந்த தன் கணவனுக்குக் கால் வலி தீர வெந்நீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
“சுவாமிகள் சற்றுப் பொறுக்க வேண்டும். இதோ வந்து விடுகிறேன்" என்றாள் அவள்.
முனிவருக்கு ஆத்திரமாக வந்தது. 'என் தவ வலிமையை அறியாத இவள் என்னைக் காக்க வைக்கிறாளே!' என்று குமுறினார்.
சற்றைக்கெல்லாம் ஒரு தட்டில் அவருக்காக உணவை எடுத்து வந்தாள் அந்தப் பெண்மணி. முனிவர் தன்னைச் சீற்றத்துடன் பார்ப்பதைக் கண்டதும் அவள் மெல்ல நகைத்தாள்.
"கொக்கென்று நினைத்தீரோ கொங்கணவ முனிவரே!'' என்றாள்.
திடுக்கிட்ட முனிவரின் சினம் தணிந்தது.
"தாயே! நான் கொக்கை எரித்ததும் என் பெயரும் உங்களுக்கு எப்படித் தெரிந்தன?" - வியப்புடன் கேட்ட அவருக்கு அன்புடன் உணவு வட்டித்தபடி அந்தப் பெண்மணி கூறினாள்.
"முனிவரே! அடுத்தத் தெருவில் ஒரு கசாப்புக் கடைக்காரன் இருக்கிறான். அவனிடம் கேட்டால் உங்களுக்கு விளக்கமாகக் கூறுவான்."
முனிவரின் வியப்பு மேலும் அதிகரித்தது. சாப்பிட்டானதும் அவர், அடுத்த தெருவிலிருந்த கசாப்புக் கடைக்குச் சென்றார். அந்தக் கடைக்காரன் அவரைப் பார்த்தான். இரத்தத்தில் நனைந்த கைகளால் அவரைக் கும்பிட்டு வணங்கினான்.
"சுவாமி! கடமையை முடித்துவிட்டு நான் வரும் வரையில் காத்திருங்கள். பிறகு என் வீட்டிற்குச் செல்வோம். அங்கும் என் கடமையை முடித்துவிட்டு, அடுத்த தெரு அம்மாளிடம் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கிறேன்'' என்று அவன் கூறினான்.
முனிவர் பிரமித்துப் போனார். சற்றுப் பொழுது கழிந்தது. கடையை மூடிவிட்டுப் புறப்பட்ட அவனைத் தொடர்ந்த முனிவர், ஓர் ஆட்டைப் போலவே தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சென்றார். இப்போது அவர் முகத்தில் ஆணவம் இல்லை. சாந்தத்துடன் சிந்தித்துக் கொண்டேப் போனார்.
திண்ணையில் அவரை உட்கார வைத்து விட்டு அவன் குடிசையினுள் சென்றான். கைகால்களைக் கழுவிக் கொண்டான். வீட்டில் அவனுடைய வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். அவர்கள் குருடர்கள். அவர்களுக்குத் தங்கள் மாலைக் கடன்களை முடிக்க அவன் உதவினான். பிறகு, அவர்கள் மூவரும் கடவுளை வணங்கினார்கள். அவர்களுக்கு உணவு ஊட்டினான் அந்த நல்ல மகன். பிறகே அவன் முனிவரிடம் வந்தான்.
"என்ன முனிவரே! உங்கள் கேள்விக்கு நான் விடை கூறவா?'' பணிவுடன் கேட்டான் அவன்.
"வேண்டாமப்பா, வேண்டாம். என் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது." முனிவர் தொடர்ந்து கூறினார் “எவனொருவன் அன்புடனும் பண்புடனும் மனத்தை ஒருமைப்படுத்தித் தன் கடமைகளைச் சரிவரச் செய்து, பிறகு இறைவனைத் தொழுகிறானோ, அவனைத் தேடி ஞானமும் சக்தியும் தாமாக ஓடி வரும். தவம் செய்வதை விடப் பிறரிடம் அன்புடனும் பொறுமையுடனும் பழகுவதுதான் சிறந்த நோன்பு என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.''