தோட்டத்தில் திராட்சைக் கொடியில் அழகழகான குலைகள் குலுங்கின. வானத்து முற்றத்தில் சிதறி விழுந்த எண்ணற்ற தாரகைகளை எவளோ ஒருத்தி மென்விரலினால் கோர்த்து இந்தக் கொடிமுந்திரிக் குலைகளை அடுக்கி வைத்திருக்கிறாளோ என்று தோற்றியது. அந்த மென்விரலழகி எவள்? வைகறையில் ஓசைப்படாமல் கிழக்குவாசலில் வந்து நிற்கும் உஷைதான்!
தோட்டத்து வழியேச் சென்ற மூவர், திராட்சைக் குலையின் அழகைக் கண்டு நின்றார்கள். ஒருவன், பத்து வயதுள்ள பையன். இரண்டாமவன், இருபத்தைந்து வயது இளைஞன். மூன்றாமவன், அறுபது வயதுக் கிழவன்.
பையன் சொன்னான்: "ஆகா! திராட்சையைப் பார்த்தாலே நாக்கில் நீர் ஊறுகிறது. யாராவது இந்தப் பழங்களைப் பறித்துக் கொடுத்தால் ஒரு நொடியில் விழுங்கி விடுவேன்!''
இளைஞன் காதில் இந்தப் பேச்சு விழுந்தது. இதே பேச்சை முன்பு எங்கோ கேட்டிருப்பதாகத் தோன்றிற்று; ஆனால் எங்கே என்பது நினைவுக்கு வரவில்லை.
அவன் அந்தப் பையனை நோக்கி, ''குழந்தாய், நீ சிறு பையன். இவ்வளவு அழகிய திராட்சை வெறுமே தின்பதற்காகவா இருக்கிறது? ஊகும்!" என்றான்.
பிறகு அவன் தனக்குள், பிறருக்கு இலேசாகக் கேட்கும் குரலில், “ஆண்டவன் அழகுக்கு அழிவென்னும் சாபத்தைத் தந்திருக்கலாம்; ஆனால் மனிதன் அழகின் அந்தச் சாபத்தை மீட்க முடியும். கலையினால் அழகு அமர வாழ்வு எய்துகிறது” என்றான்.
ஒரு கணம் அவன் நிதானித்து, பசுமையும் இளம்பசுமையும் இளமஞ்சளுமான அழகிய கனிகளைக் கண்ணாரப் பார்த்தான்; “இந்தக் கொடி முந்திரியை ஓவியமாகத் தீட்ட என் கை துடிக்கிறது. வர்ணம் வேண்டும் எனக்கு. யாராவது வர்ணம் கொணர்ந்து என்னிடம் கொடுங்கள்" என்றான்.
இவ்வளவும் கிழவன் காதில் விழுந்தன. இந்தப் பேச்சுக்களை எங்கோ கேட்டிருப்பதாக அவனுக்குத் தோன்றிற்று; எங்கே என்பது நினைவில்லை.
அவன் இளைஞனைப் பார்த்து, "இல்லறம் நடத்தும் இளமகனே, கொடிமுந்திரியைப் படத்தில் எழுதுவதனால் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது? நீ இன்னும் நீண்ட நாள் உலகில் வாழ வேண்டும்; எத்தனையோ தொல்லைகளுக்கு ஈடு கொடுக்க வேண்டும். வாழ்வுப் பயணத்தில் உன் கால்கள் இரத்தக் களரியாகித் துடிக்கும். அந்த வேதனையை மறக்க, ஏதாவது ஒரு மருந்து இருக்க வேண்டும்'' என்றான்.
கிழவனுடைய பேச்சு இளைஞனுக்கு விளங்கவில்லை. அப்பொழுது கிழவன் அவனை அருகில் அழைத்து, அவன் காதில், "திராட்சை மது மிகவும் உயர்ந்தது!'' என்று ஓதினான்.