ஒரு மன்னன் போரில் எதிரிகளால் கொல்லப்பட்டான். அவனது மனைவி மக்கள், அவன் உடல் மீது விழுந்து கதறியபடி தொடர்ந்து அழுது கொண்டிருந்தனர். அழுகை ஒலி அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது.
அவர்களின் அறியாமையை நீக்கி ஆறுதல் கூற எமன் எண்ணினான்.
ஒரு குழந்தை வடிவில் வந்து அவர்களிடம் பேசினான்:
"அரசன் இறந்துவிட்டான் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. அவன் எங்கிருந்து வந்தானோ அங்கேயேச் சென்றுவிட்டான். உயிர், தான் பட்ட கடனைத் தீர்க்க இந்த உடல் அதற்கு இருப்பிடமாக உள்ளது. அவ்வளவுதான்.
"அந்த வேலை முடிந்ததும் இந்த உடலை விட்டு உயிர் சென்று விடும். உடலுக்குத்தான் அழிவே தவிர, ஆன்மாவுக்கு அல்ல. நீங்கள் அழுகிறீர்கள், கதறுகிறீர்கள். அவன் இங்கிருந்தால் அல்லவா உங்களுக்குப் பதில் கூறுவான்.
"ஒரு காட்டில் வேடன் ஒருவன் விரித்த வலையில் ஒரு பெண் புறா சிக்கியது. அதனைக் கண்ட ஆண் புறா அழுது புலம்பியது. பதுங்கியிருந்த வேடன் அதனையும் கொன்றான். அந்த ஆண் பறவை போலத்தான் நீங்களும் உள்ளீர்கள். அரசன் மறைவிற்காக இப்படி அழும் உங்களுக்கும் சாவு காத்திருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவில்லை”
இவ்வாறு கூறிவிட்டுக் குழந்தை உருவில் வந்த எமன் மறைந்தான். உண்மை உணர்ந்த அரச குடும்பத்தினர் ஆறுதல் பெற்றனர்.