நோயுற்ற ஒரு மன்னன் தன் மகனுக்கு ஆட்சியில் துணை புரிந்து அறிவுரை கூற ஒருவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினான்.
அவையில் மன்னன், ‘‘என் ஆட்சி பற்றி உங்கள் மனதில் தோன்றிய கருத்துகளை ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளதை உள்ளபடிக் கூறுங்கள்’’ என்றான்.
ஒவ்வொருவரும் எழுந்து, ‘‘உங்களைப் போல் சிறப்பாக ஆட்சி புரிந்தவர்கள், அறிவாற்றல் மிக்கவர்கள் இதுவரை இருந்ததே இல்லை’’ என மன்னனைப் போலித்தனமாகப் புகழ்ந்தனர்.
அவ்வாறு புகழ்ந்து பேசியவர்களுக்கு எல்லாம் ஆளுக்கொரு வைரத்தைப் பரிசாக அளித்தான்.
ஒருவர் மட்டும் எதுவும் கூறாமல் இருந்தார். அவரிடம் மன்னன், ‘‘நீங்கள் ஏன் எதுவும் கூறவில்லை?’’ என்று கேட்டான்.
‘‘அரசே! நீங்கள் மகிழும்படியான பதிலை மற்றவர்கள் கூறினார்கள். அப்படி நான் கூற விரும்பவில்லை. நீங்கள் நல்லவர், வல்லவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் உங்களைவிடச் சிறந்தவர் உலகிலேயே இல்லை என என்னால் கூற இயலவில்லை’’ என்றார் அவர்.
அவருக்கும் ஒரு வைரத்தைப் பரிசாக அளித்தான் மன்னன்.
எல்லோரும் சென்றனர்.
மறுநாள் அந்த ஒருவரைத் தவிர மற்றவர்களெல்லாம் மன்னன் முதல் நாள் தந்த வைரத்தை எடுத்துக் கொண்டு வந்தனர்.
‘‘அரசே! நீங்கள் தந்த வைரக்கற்கள் அனைத்தும் சோதித்துப் பார்த்ததில் போலி எனத் தெரிந்துவிட்டது. இப்படிப் போலி வைரத்தை ஏன் தந்தீர்கள்?’’ என்று கேட்டனர்.
அதற்கு மன்னன், ‘‘நீங்கள் எல்லோரும் என் கேள்விக்குப் போலியான பதிலைச் சொன்னீர்கள். அதனால் போலி வைரத்தைத் தந்தேன். ஒருவர் மட்டும் உண்மையைத் துணிந்து கூறினார். அவருக்கு உண்மை வைரம் பரிசாகக் கிடைத்தது. அவர்தான் இனி அமைச்சர். என் மகன் நல்லாட்சி புரிய அவரே உதவுவார்’’ என்றான்.