வேத வியாசரின் திருக்குமாரன் சுக முனிவர். அவரை எல்லோரும் ‘சுகப்பிரம்ம மகரிஷி’ என்றுதான் அழைப்பர்.
ஒரு நாள் அவர் வியாசரிடம், ‘‘தந்தையே! நான் பிரம்மஞானம் பெற ஒரு வழி சொல்லுங்கள்?’’ என்று கேட்டார்.
உடனே வியாசர், ‘‘மகனே! மிதிலைக்குச் செல். மன்னர் ஜனகரே உனக்கு பிரம்மஞானம் வழங்கத் தகுதி பெற்றவர்’’ என்றார்.
அதன்படி, சுகர் மிதிலை நகரை அடைந்தார். அரண்மனை காவலாளியிடம், ‘‘உங்கள் மன்னரிடம், சுகப்பிரம்ம மகரிஷி வந்திருப்பதாகச் சொல்’’ என்றார். காவலன் அவ்வாறே கூறினான்.
உடனே அரசர், ‘‘அவருடன் வந்திருப்பவர்களை விட்டுவிட்டுத் தனியே வரச் சொல்’ என்றார்.
காவலன், ‘‘அரசே! அவர் தனியேதான் வந்திருக்கிறார்’’ என்றான்.
‘‘நான் கூறியதை அப்படியே அவரிடம் போய்ச் சொல்’’-அரசர்
வெளியே வந்த காவலன் மகரிஷியிடம், ‘‘சாமி! உங்களுடன் வந்திருப்பவர்களை விட்டுவிட்டுத் தங்களை மட்டும் வரும்படி மன்னர் கூறினார்’’ என்றான்.
இதனைக் கேட்டுச் சிந்தனையில் ஆழ்ந்த மகரிஷி தமது பெயருக்குப் பின்னே, ‘சுகப்பிரம்ம மகரிஷி’ என்று குறிப்பிட்டதைத்தான் அரசர் இவ்வாறு குறிப்பிடுகிறார் என்பதைப் புரிந்து கொண்டார்.
உடனே அவர், ‘‘சுகப்பிரம்மம் வந்திருப்பதாக அரசரிடம் கூறு’’ என்றார். அவ்வாறே காவலன் கூறினான்.
அதற்கு அரசர், ‘‘தனியேதான் அவரை வரச் சொன்னேன். இப்போதும் துணைக்கு ஒருவரை அழைத்துக் கொண்டிருக்கிறாரே! அவரையும் விட்டு வரச் சொல்’’ என்றார்.
காவலன் சென்று கூறினான். அதையும் புரிந்து கொண்ட மகரிஷி, ‘‘உங்கள் அரசரிடம் சுகன் வந்திருக்கிறான் என்று கூறு’’ என்றார்.
காவலன் கூறினான்.
உடனே ஜனகர், ‘‘சுகப்பிரம்ம மகரிஷியை அழைத்து வாருங்கள்’’ என்றார்.