''நானும் புலி மாதிரியே இருக்கேன். முகமும் உடம்பும் அது மாதிரிதான். என்ன, என்னை விட புலியண்ணன் கொஞ்சம் பெரிசா இருக்காரு, அவ்வளவுதான்'' என்று பூனை தன்னைத்தானே நக்கிக் கொண்டது.
இப்படிப் பூனை பல காலமாக யோசித்து வந்தது. அதனால் அது எல்லோரையும் பயமுறுத்த ஆரம்பித்தது. ஒரு சில சிறு விலங்குகள் பயந்து ஓடின.
ஆனால் நரி, ஓநாய், நாய் முதலியவற்றிடமிருந்து பூனை செமத்தியாகக் கடி வாங்கிவிட்டது.
அது எங்கு போனாலும் அடிதான் விழுகின்றது.
பூனைக்கு இது புரியாத புதிர்.
முடிவில், 'நான் இனி யாரிடமும் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ளக் கூடாது. அடக்கம்தான் உத்தமமானது. இனி எனக்கும் கீழான பிராணிகளிடம் நான் அன்பாக இருப்பேன்' என்று தீர்மானித்தது.
இதன் பிறகு, முயலும், புறாவும் பூனையோடு விளையாட ஆரம்பித்தன. மிக நெருங்கியதாக மாறிவிட்ட எலி, பூனையின் மீது ஓடியாடி விளையாடவேத் தொடங்கிவிட்டது!
ஓரிரு வாரங்கள் சென்றிருக்கும்.
''ஏ பூனையே, உன்னை விளையாடக் கூப்பிட்டேன். ஏன் இன்னிக்கு இவ்வளவு லேட்டா வந்தே?'' என்று கூறிக்கொண்டே பாதித் தூக்கத்தில் இருந்த பூனையின் காதைக் கடித்துவிட்டது எலி.
வலியால் பூனை துடித்தது. அப்போது அந்த வழியாக வந்த புலி பூனையிடம் நடந்ததை விசாரித்தது.
பூனை புலம்பியது: ''நான் தைரியமாக இருந்தாலும் துன்பப்படுகிறேன். அன்பாக இருந்தாலும் கஷ்டப்படுகிறேன். ஏன் இப்படி?'' என்று கேட்டது.
அதற்குப் புலி, ''முட்டாளே, நீ சக்தி இருப்பதாகக் காட்டிக் கொண்டு ஏன் பாசாங்கு செய்தாய்? யாரிடம் எந்த அளவிற்குப் பணிந்து போக வேண்டும் என்பதை நீ கற்க வேண்டும். எங்கும் யாரிடமும் நீ பாசாங்கு செய்து, பிறரைப் போல் 'காப்பி' அடிக்கும் வரை உனக்கு நிம்மதி இல்லை. நீ வெற்றி பெற வேண்டுமென்றால், 'நீ நீயாக இரு' என்று கூறியது.