ஓர் ஏழைப் பெண்மணி மளிகைக் கடைக்குச் சென்றாள். சில சாமான்கள் கடனாகக் கொடுக்கும்படிக் கடைக்காரரிடம் பட்டியல் நீட்டினாள்.
அவளது கணவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். குழந்தைகள் பட்டினியாய் இருந்தன. அதனால் சாமான்களுக்கான தொகையைப் பிறகு தருவதாகக் கெஞ்சிக் கேட்டாள்.
கடைக்காரர், "கடன் எல்லாம் கிடையாதம்மா. நீ போய் வா" என்று விரட்டினார்.
‘’தயவு செய்யுங்கள் ஐயா" என்று அந்தப் பெண்மணி மீண்டும் கெஞ்சினாள்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த வேறொரு வாடிக்கையாளர் கடைக்காரரிடம், “நான் பணம் தருகிறேன். இந்தம்மாவுக்குத் தேவையான பொருள்களைக் கொடுங்கள்" என்று மனமிரங்கிக் கூறினார்.
அதற்குக் கடைக்காரர் கேலியாக, "சரிம்மா, உனக்கு வேண்டிய சாமான்களை எழுதித் தராசில் வை. அதன் எடை அளவுக்குக் கடன் தருகிறேன்" என்றார்.
அந்தப் பெண்மணி சிறிது யோசித்து ஒரு காகிதத்தில் சில வரிகள் எழுதினாள். அதைத் தராசின் ஒரு தட்டில் வைத்ததும் அது உடனே கீழே இறங்கிற்று.
கடைக்காரர் மற்றொரு தட்டில் சாமான்களை வைத்த போதும் அந்தத் தட்டு கீழே போகாமல் மேலேயே நின்றது.
அதைக் கண்ட கடைக்காரர், “ஆ! என்ன அதிசயம்! தராசுத்தட்டு மேலேயே நிற்கிறதே? அப்படி என்னதான் காகிதத்தில் எழுதியிருக்கிறாய்!" என்று ஆச்சரியத்துடன் அதை எடுத்துப் படித்தார்.
அந்தக் காகிதத்தில் “அன்பே உருவான என் இறைவா! என் தேவை என்ன என்பதை நீ நன்கு அறிவாய். எல்லாவற்றையும் உன்னிடமே விட்டு விட்டேன்" என்று எழுதி இருந்தது.
அதைப்படித்த கடைக்காரர் உடனே, “அம்மா, நீங்கள் கேட்ட சாமான்களையெல்லாம் மகிழ்ச்சியாக எடுத்துச் செல்லுங்கள்" என்று பயத்துடன் கூறினார்.
அங்கு நின்றிருந்த வாடிக்கையாளரும் அந்த அம்மையாரிடம் நூறு ரூபாய் பணத்தைக் கொடுத்து, “அம்மா, தங்கள் இறைநம்பிக்கை ஈடு இணையற்றது. உங்களுக்கு உதவுவது இறைவனுக்குச் சேவை செய்வதற்குச் சமம்" என்று கூறி வணங்கினார்.
அந்தப் பெண்மணி சாமான்களை மகிழ்ச்சியுடன் எடுத்துச் சென்றாள்.
கடைக்காரர் திரும்பி, தமது தராசைப் பார்த்தவுடன் மேலும் திடுக்கிட்டார். ஏனெனில் உண்மையிலேயே அது உடைந்திருந்தது.
பிரார்த்தனையின் பளுவை ஆண்டவனைத் தவிர வேறு யார் அறிவார்?