ஒரு சமயம் கயிலாயத்தில் சிவபெருமானிடம் பார்வதிதேவி, “எனக்கு வளையல் வாங்கித் தாருங்கள்” என்று கேட்டாள்.
அதற்கு சிவபெருமான், "நான் பிட்சை எடுக்கும் ஆண்டி. எனவே என்னால் வளையல் வாங்கித் தர முடியாது” என்று விளையாட்டாகச் சொன்னார். இதனால் கோபம் கொண்ட தேவி, விநாயகரையும் முருகனையும் தூக்கிக்கொண்டு வங்காளத்திற்கு வந்துவிட்டாள்.
தேவியைச் சமாதானப்படுத்த சிவபெருமான் வளையல் விற்பவராக தேவியின் வீட்டுக்கு வந்தார். அவர் தேவியின் கை நிறைய கண்ணாடி வளையல்களை அணிவித்தபடியே, "வளையலுக்காகக் கணவரைப் பிரிந்த பெண்ணே!” என்று கூறினார்.
அதைக் கேட்ட தேவி கோபத்துடன் வளையல்காரரை நிமிர்ந்து பார்த்தாள்.
உடனே அவளுக்கு வளையல்காரராக வந்திருப்பவர் சிவபெருமான் என்பது புரிந்தது. வெட்கத்துடன் தலைகுனிந்து சிவபெருமானுடன் கயிலாயம் சென்றாள்.
தேவி வங்காளத்திலிருந்த காலமே துர்க்கா பூஜை காலம் என்ற கருத்தும் உண்டு.
வங்காளத்தில் வழங்கி வரும் ஒரு கதை இது: