ஜப்பானில் உள்ள ஒரு புத்த விஹாரம். அங்கே ஒரு வயதான புத்த குரு.
ஒரு நாள் இரவு. தாங்க முடியாத கடுங்குளிர். அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
மரத்தாலான புத்த சிற்பங்கள் அங்கே நிறைய இருந்தன. அந்த குரு அதில் ஒன்றை எடுத்து அதற்குத் தீ மூட்டிக் குளிர் காய்ந்தார்!
மர சிற்பம் எரிய ஆரம்பித்ததும் படபட வென்று வெடிக்க ஆரம்பித்தது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும் அந்த விஹாரத்தின் புத்த பிட்சு வெளியே ஓடி வந்தார்.
வயதான குரு ஆனந்தமாகக் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். வந்த பிட்சுவுக்குக் கோபம் பொங்கியது. புத்தரையா எரிப்பது?
தெருவில் அலைந்துகொண்டிருந்த அந்தப் பெரியவரை இங்கே தங்க அனுமதித்ததே இந்த பிட்சுதான். அவர் இப்படிச் செய்கிறாரே? என்று நினைத்தவாறே அவரைக் கோபமாக வெறித்தார்.
“ஏன் அப்படி கோபமாகப் பார்க்கிறீர்கள்...? இப்படி வந்து அமருங்கள்" என்றார் குரு.
வந்தவருக்கு மேலும் கோபம் வந்தது.
“எங்கள் கடவுளை எரித்துவிட்டீர்களே!" என்று சத்தமிட்டார்.
“அப்படியா?" என்று கேட்டவாறே குரு அந்தச் சாம்பலைக் கிளறினார்.
“என்ன தேடுகிறீர்கள்?" என்றார் இவர்.
“நான் எலும்புகளைத் தேடுகிறேன்!"
“நீங்கள் சரியான பைத்தியம்... இது ஒரு மரச் சிற்பம். இதில் எலும்புகள் கிடையாது" என்றார் இவர்.
கடைசியில் பிட்சுவுக்குத் தாங்க முடியாத கோபம் வந்துவிட்டது. “உடனே வெளியே போங்கள்" என்று குருவைப் பார்த்து கத்தினார்.
வெளியே தள்ளி கதவையும் சாத்தினார்.
மறுநாள் காலையில் கதவைத் திறந்து பார்த்தால் அந்தப் பெரியவர் ஒரு மைல்கல் மேலே சில பூக்களை வைத்து ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
பிட்சு துணுக்குற்று, “இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்று அவரிடம் கேட்டார்.
“இதுதான் எனது காலைப் பிரார்த்தனை!" என்றார் அமைதியாக.
“நிஜமாகவே நீங்கள் ஒரு பைத்தியம்தான். ஏனென்றால் இது ஒரு மைல்கல். இது எப்படி கடவுளாகும்?"
அப்போது அந்தப் பெரியவர் சொன்னார்:
“நீங்கள் ஒரு மரத்தை புத்தராக்கும் போது நான் ஏன் ஒரு “மைல்கல்லைப் புத்தராக்கக் கூடாது? நான் புத்தரை எரித்தேன். ஏனென்றால் அவரை நான் நேசிக்கிறேன். அந்தச் சிற்பம் மரத்தால் ஆனது என்பது எனக்குத் தெரியும்.
“மைல்கல்லைத் தொழுகிறேன். ஏனென்றால் அது எனது பூக்களைத் தாங்குகிறது. நான் இந்த மைல்கல்லுக்குள் மறைந்திருக்கும் புத்தரைப் பார்க்கிறேன்.
“யாராவது ஒரு சிற்பி இதைச் சிலையாக்கினால்தான் நீங்கள் புத்தரைப் பார்ப்பீர்கள்.
“அன்றைக்கு எனக்குக் குளிராக இருந்தது. என்னால் தியானிக்க முடியவில்லை. நான் எனக்குள்ளே இருக்கிற புத்தரையும் பாதுகாக்க வேண்டும்.
“உள்ளே இருக்கும் புத்தரைக் காப்பாற்றுவதற்காக வெளியே உள்ள புத்தரை எரிக்கலாம், அது தவறில்லை. அது அவருடைய போதனையிலேயே இருக்கிறது.
“உன்னுள் ஜோதியாக இரு" - என்பதுதானே புத்தரது போதனை. என் புத்தர் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். அந்த மரச் சிற்பங்கள் வெயில் - மழையில் - உணர்ச்சி இல்லாமல் இருந்தன.
“அதனால்தான் அப்படிச் செய்தேன். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? நான் ஒரு மர புத்தரை எரித்ததற்காக உயிருள்ள புத்தரை வெளியே தள்ளிக் கதவைச் சாத்தினீர்கள்!" - என்றார் அந்தப் பெரியவர்.