ஒரு கஞ்சன் தன் மகனிடம், “இதோ பார், பக்கத்து ஊரிலுள்ள என் நண்பனுக்கு நான் விழாக்காலப் பரிசு கொடுக்க ஆசைப்படுகிறேன். நான்கு ஆட்டுக் குட்டிகளைத் தருகிறேன். நீ அவற்றைக் கொண்டு போய் அவரிடம் கொடுத்து வா?" என்றான்.
“சரி" என்றான் பிள்ளை.
“ஒரு பையை எடுத்துக் கொள்" என்றான் தந்தை.
அவனும் எடுத்துக் கொண்டான். “இந்தா ஆட்டுக் குட்டி. ஒவ்வொன்றாகப் போடுகிறேன். பையில் பிடித்துக் கொள்" என்று சொல்லி ஒன்று - இரண்டு - மூன்று என்று எண்ணிக் கொண்டே வெறும் கையாலேயே ஆட்டுக் குட்டியைப் பிடித்துப் போடுவது போல் பாவனை செய்தான்.
மகனும் அதை அக்கரையுடன் வாங்குவது போல் வாங்கிக் கொண்டு ஊருக்குப் போனான்.
இவன் அங்கே போய்ச் சேர்ந்த நேரத்தில் அந்தக் கஞ்சன் ஊரில் இல்லை. அவனது பிள்ளை மட்டும் வீட்டில் இருந்தான். இவன் அவனிடம், “இதோ, என் அப்பா உன் அப்பாவிற்கு ஆட்டுக்குட்டிகளைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்" என்று சொல்லி பாவனையிலேயே ஒவ்வொன்றாக எடுத்து அவனிடம் கொடுத்தான்.
அவனும் சிரத்தையோடு வாங்கிக் கொண்டான்.
“நானும் பதிலுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமில்லையா. அதனால் நீ உன் பையைப் பிடி. பத்து எலுமிச்சம்பழம் தருகிறேன். எடுத்துக் கொண்டு போ" என்று சொல்லிக் கையாலேயே ஒவ்வொன்றாக எடுத்துப் போடுவதுபோல் பாவனை செய்தான்.
அவனும் ‘ரொம்ப நன்றி’ என்று சொல்லி அதை வாங்கிக் கொண்டு போனான்.
சற்று நேரம் கழித்து வெளியூர் போயிருந்த தந்தை திரும்பி வந்தார்.
பிள்ளை அவரிடம், “அப்பா, உங்கள் நண்பர் தன் மகன் மூலமாக உங்களுக்கு நான்கு ஆட்டுக்குட்டிகளைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். நானும் பதிலுக்கு எலுமிச்சம்பழங்களைக் கொடுத்து அனுப்பினேன். சரிதானே?" என்றான்.
“எப்படிக் கொடுத்தாய்? எவ்வளவு கொடுத்தாய்?" என்று பரபரப்பாகக் கேட்டார் அப்பா.
“பத்துப் பழங்களை இப்படிக் கொடுத்தேன்" என்று சொல்லிச் சைகையிலே அளவைக் காட்டினான்.
இதைப் பார்த்ததும் அவனது அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது. பளார் என்று பையனை அறைந்தார்.
“ஏன் அப்பா அடித்தீர்கள்? பத்து எலுமிச்சம் பழங்களைக் கொடுத்தேன் என்றா?" என்று கேட்டான் மகன்.
“அதாவது பரவாயில்லடா... நீ காட்டிய அளவைப் பார்த்தால் அது எலுமிச்சம்பழம் போல் இல்லை, ஆரஞ்சுப் பழம் அளவிற்கு இருக்கிறதே. அவ்வளவு பெரிதாக ஏன் கொடுத்தாய்?" என்றார் கோபமாக.