முல்லா நஸ்ரூதீன் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். முதல் நாள் அப்துல் வகுப்பிற்கு தாமதமாக வந்தான். மாணவனின் கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்தார் முல்லா.
ஏன் அடிச்சீங்க?" என்று கேட்டான் அப்துல்.
தாமதமாக வரக் கூடாது என்பதற்காக" என்றார் முல்லா.
இரண்டாம் நாள் சரியான நேரத்தில் வந்துவிட்டான் அப்துல். ஆனால் ஓடி வந்ததால் அவன் வெள்ளைச் சட்டையின் மேல் தெருவின் சேறும் சகதியும் தெறித்திருந்தது. ‘பளார்’ என்று மீண்டும் ஓர் அறைவிட்டார் முல்லா.
ஏன் அடிச்சீங்க?" என்று கேட்டதற்கு, சுத்தமான சட்டை போட்டுக் கொண்டு வகுப்புக்கு வர வேண்டும் என்பதற்காக" என்றார் முல்லா.
மூன்றாம் நாள் சரியான நேரத்திற்கு நல்ல சட்டை அணிந்து வந்த அப்துல் கணக்குப் பாடத்தில் ஒரு தவறு செய்துவிட்டான். அன்றும் அறைந்தார் முல்லா. ஏன் அடிச்சீங்க? என்று கேட்ட அப்துலிடம் பாடம் சரியாகச் செய்யாததற்காக" என்றார் முல்லா.
நான்காம் நாள் சரியான நேரத்திற்கு, நல்ல சட்டையுடன் வந்த அப்துல் பாடத்தையும் சரியாகச் செய்திருந்தான்.
அன்றும் அறைந்தார் முல்லா. ஏன் என்று கேட்டான் அப்துல்.
இந்த உலகில் எப்போதும் நீ சரியாக நடந்து கொண்டாலும் எல்லாவற்றிற்குமே உனக்கு நியாயம் கிடைக்காது என நீ தெரிந்து கொள்ள..." என்றார் முல்லா.