அந்த அம்மா மிகுந்த நோய்வாய்ப்பட்டிருந்தாள். அவளது மகன் கலங்கியபடி அருகில் அமர்ந்து ‘எனக்காக எவ்வளவு தியாகம் செய்துள்ளாள் அம்மா. இவள் நம்மை விட்டுப் பிரியக் கூடாதே’ என்று பயந்தான்.
கண் மூடியிருந்த தாய், ‘‘மகனே! குடிக்க நீர் இருக்கா?’ என்று கேட்டாள்.
அங்கு நீர் இல்லாததைக் கண்டு உடனே வெளியே ஓடினான் சிறுவன். சற்று தூரம் சென்றதும் அங்குள்ள மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு பெரியவரிடம், ‘‘தாத்தா! என் தாய் உயிர்போகும் தருணத்தில் நீருக்காகத் தவிக்கிறாள். இங்கு எங்கே நீர் கிடைக்கும்?’’ என்று கேட்டான்.
‘‘அதோ, சற்று தூரம் சென்றால் நல்ல நீருள்ள சுனை உள்ளது. ஆனால்...’’ என்று கூறித் தயங்கினார்.
‘‘என்ன தாத்தா சொல்லுங்கள்?’’
‘‘மகனே, அங்கு போகத் தடைகள் பல. வழியில் எப்பக்கமும் திரும்பாதே! யார் கூப்பிட்டாலும் பார்க்காதே! ஒரு வேளை மற்றவர் போல் நீயும் கல்லாகிவிடலாம்! உன் தாயைக் காக்க வேண்டும் என்றால், எந்தச் சிந்தனையுமின்றி, எல்லாத் தடையையும் எதிர்த்து சென்றால் உனக்கு தேவாமிர்தமான நீர் கிடைக்கும். அதனால் உன் தாயும் புத்துயிர் பெற்றுவிடுவாள். வென்று வா மகனே!’’ என்றார்.
பெரியவருக்கு நன்றி கூறிவிட்டு அவர் காட்டிய திசையில் விரைந்தான். வேறு எந்தக் கவனமும் இல்லை. எந்தக் குரலையும் அவன் காதில் வாங்கவில்லை. வழியில் ஆங்காங்கே கல்லாய் மாறிவிட்ட மனிதர்கள்! அவன் எதற்கும் அஞ்சவில்லை.
அன்னையின் ‘தண்ணீர்! தண்ணீர்!’ என்ற தீனமான குரல் மட்டுமே அவன் காதில் விழுந்தது. வேறு எதற்கும் அவன் செவிசாய்க்காது ஓடினான்.
எதிரில் பெரும் காட்டுத் தீ! அஞ்சாமல் உள்ளே நடந்தான். அது குளிர்ந்த காற்றாகி அவனைத் தாலாட்டியது!
சிறிது தூரத்தில் அவன் எதிரே பெருக்கெடுத்த வெள்ளம் குறுக்கிட்டது. அருகில் சென்றதும் அது கானல்நீராக விலகியது.
இதோ! சுனைக்கு வந்துவிட்டான் சிறுவன்! நீரை எடுத்துத் தெளித்துக் கொண்டான். புதிய எழுச்சி பிறந்தது. தான் கொண்டு வந்த ஜாடியில் சுனைநீரை நிரப்பிக் கொண்டான்.
தாயின் அன்புதான் எத்தனை வலுவானது! தாயை நோக்கி ஓடிச் சென்று வாயில் நீரை வார்த்தான். அன்னையும் புத்துயிர் பெற்று எழுந்தாள்.
இவ்வளவு வைராக்கியமாக இச்சிறுவன் சாதித்ததற்கு, அந்த அன்னையின் அன்பும் பாசமும்தான் காரணம்!