ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நிகழ்ந்தது. ஈசுவரனின் ஆதரவும் ஆசியும் சேர்ந்து தேவர்கள் வெற்றி அடைந்தனர்.
ஆனால், அவர்கள் ஈசுவரனை மறந்து, 'அஸ்மாகம் ஏவாயம் விஜயோ அஸ்மாகம் ஏவாயம் மஹிமேதி' என்று நினைத்தனர். அதாவது, ‘இந்த வெற்றி எங்கள் திறனால் ஏற்பட்டது. அதன் பெருமை எங்களுடையதே ஆகும்' என்பதாகும்.
அவர்கள் கர்வமடைந்து தங்கள் வெற்றியைக் கொண்டாட ஆரம்பித்தனர்.
அப்பொழுது அவர்களுடைய கூட்டத்திற்குச் சற்று தூரத்தில் எவரும் முன் பின் கண்டிராத ஓர் அதிசயமான உருவம் திடீரெனக் காணப்பட்டது.
அவ்வடிவம் என்னவென்றோ எக்காரணம் பற்றித் தோன்றியதென்றோ தேவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.
அக்னிதேவனைப் பார்த்து மற்ற தேவர்கள் 'இது என்னவென்று நீர் கண்டுபிடியும்' என்றனர். அக்னிதேவன், ‘அங்ஙனமே ஆகட்டும்' என்று ஒப்புக்கொண்டு அவ்வுருவத்தை அணுகியதும், அது “நீ யார்?' என்று கேட்டது.
'நான் அக்னிதேவன் அனைத்தையும் அறிவேன், அதனால் எனக்கு ஜாத வேதஸ் என்ற சிறப்புப் பெயர்' என்று பதிலுரைத்தான்.
'உன்னிடம் என்ன வீரியம் உளது?' என்று கேட்கவே, 'இவ்வுலகில் எதெது உண்டோ அதையெல்லாம் எரித்துவிடும் சக்தி என்னிடம் உள்ளது' என்றான்.
அவ்வுருவம் ஒரு புல்லைப் போட்டு ‘இதை எரி, பார்ப்போம்' என்றது.
அக்னிதேவன் விரைந்து பாய்ந்து தன்னாலானவரை முயன்றும் அப்புல்லை எரிக்க முடியாமல், இவ்வுருவம் என்ன? என்று என்னால் தெரிந்து கொள்ள இயலவில்லை' என்று திரும்பி விட்டான்.
பின்பு தேவர்கள் வாயுவை அனுப்பினார்கள்,
அவ்வுருவம் வாயுவை, ‘நீ யார்?' எனக் கேட்க, ' நான் வாயு, பிரசித்தி பெற்றவன்' என்றான்.
‘அப்படிப்பட்ட உன்னிடம் என்ன வீரியம் உள்ளது?'
'பூமியில் எது உண்டோ அது எல்லாவற்றையும் நான் தூக்கி விடுவேன்' என்றான்.
'இதைத் தூக்கு' என்று ஒரு புல்லைக் காட்டவே, வாயுதேவன் அதன் மேல் முழுவேகத்துடன் பாய்ந்தும் அதை அசைக்கவும் முடியாமல் தலை குனிந்து திரும்பினான்.
அதன் பின் தேவர்கள் தங்கள் நாயகனான இந்திரனை அனுப்பினர்.
இந்திரன் அவ்வுருவத்தை அணுகியதும் அது பேசாமல் மறைந்து விட்டது. இந்திரன் திகைத்து நிற்கையில், அங்கே ஆகாயத்தில் இமவான் புத்திரியும் மிகுந்த அழகுடன் பிரகாசிப்பவளுமான உமாதேவி அவனுக்குக் காட்சியளித்தாள்.
‘இங்கு காணப்பட்ட அதிசய உருவம் என்ன?' என்று அந்த தேவியை இந்திரன் கேட்டான்.
'ஸா ப்ரஹ்மேதி ஹோவாச ப்ரஹ்மணோவா எதத் விஜயே மஹீயத்வ மிதி-அது பிரம்மம், ஈசுவர வடிவம், அது இருள் நிறைந்த மன வெளியில் மின்னல் மின்னுவது போல் தோன்றி மறையும். இப்படிப்பட்டதென்று எவராலும் வர்ணிக்க வொண்ணாதது, அறியப்படாமல் அறியும் வஸ்துவாயிருப்பது, உங்கள் வெற்றிக்குக் காரணமான அதைத்தான் நீங்கள் கொண்டாட வேண்டும். அதை வழிபட வேண்டும், அதற்குத் தவமும் தன்னடக்கமும் கருமமும் அங்கங்கள்' என்று அறிவுரை வழங்கினாள்.
தேவியின் அருளால் அந்த அறிவுரை இந்திரனுக்குக் கிடைத்தது.
‘இதமதர்சம் இதமதர்சம் ' என்றான், அதாவது, ‘இதைக் கண்டு கொண்டேன், இதைக் கண்டு கொண்டேன்' என்று இந்திரன் கூறியதால் இந்திரனுக்கு இந்திரன் என்ற பெயர் ஏற்பட்டதென்று இன்னோரிடத்தில் வேதம் கூறுகிறது.
நம்முடைய வெற்றியில் இறைவனே வெற்றியடைகிறான். 'அவனன்றி ஓரணுவும் அசையாது' என்று கண்டு கொள்வதுதான் அறிவு. அவ்வறிவு அகிலாண்டேசுவரியின் அருளால்தான் கிட்டும்.