பௌத்தத் துறவி ஆசாரியார் நாகார்ஜுனருக்கு ஒரு உதவியாளர் தேவைப்பட்டார்.
பௌத்த மடத்தின் தலைவர் இரண்டு இளைஞர்களை அவரிடம் அனுப்பி வைத்தார்.
நாகார்ஜுனர் அந்த இரண்டு இளைஞர்களிடமும் ஒரு வேதிப்பொருளைக் கொடுத்து, இரண்டு நாட்களில் அதன் தன்மையைப் புரிந்து கொண்டு வரும்படி கூறியனுப்பினார்.
இரண்டு நாட்கள் கழிந்தன. இருவரும் வந்தனர்.
ஒருவன் கையில் மட்டும் பாத்திரம் இருந்தது. மற்றவன் வெறும் கையுடன் வந்திருந்தான்.
"தாங்கள் கூறியபடியேச் செய்தேன்'' என்று கூறினான் முதலாமவன்.
"ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். அன்று இங்கிருந்து போகும் பொழுது, வழியில் ஒரு நோயாளி துன்பப்படுவதைப் பார்த்தேன். அவர் உடல் நலம் பெற இரண்டு நாட்கள் ஆயின. அந்த இரண்டு நாட்களும் அவருக்குப் பணிவிடை செய்வதிலேயேக் கழிந்துவிட்டன. ஆகவே, தாங்கள் இட்ட பணியை என்னால் செய்ய இயலாமல் போய்விட்டது" என்று தெரிவித்தான் இரண்டாமவன்.
உயிரினங்களுக்குச் சேவை செய்யும் அன்பு நெஞ்சம் கொண்ட இரண்டாமவனையே நாகார்ஜுனர் தமது உதவியாளனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.