அல்மோரா மன்னர் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மலைப்பிரதேசமான தமது நாட்டைக் காப்பதற்காகத் தமது சேனையில் புதியதாக ஓர் அணியை உருவாக்கத் தீர்மானித்தார்.
அதன்படி நிறைய இளைஞர்களைத் திரட்டி ஒவ்வொருவருக்கும் மன்னர் புதிதாக வாள் ஒன்றைப் பரிசாக அளித்தார்.
அதன் பின் ஆணையிட்டார்: "ப்ரசல! (போகலாம்!)'' உடனே எல்லோரும் உறைகளிலிருந்து வாளை உருவி உயர்த்திப் பிடித்தபடி, "ஹாய்... ஹூய்!'' என்று ஆரவாரமிட்டபடி நடக்கத் தொடங்கினார்கள்.
"என்ன இதெல்லாம்?'' என்று மன்னர் கேட்டார்.
அந்த இளைஞர்கள், "அரசே, நாங்கள் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டாமா? திடீரென்று எதிரி தாக்கிவிட்டால்? அதற்காகத்தான்'' என்று பதிலளித்தார்கள்.
மன்னர் கூறினார்: “நீங்கள் அத்தனை பேரும் வீட்டுக்குப் போகலாம். உங்களைப் போன்ற கோழைகள் தேவையில்லை. எடுத்ததற்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்பவர்களால் எனக்கு ஒரு பயனும் இல்லை. சுத்தவீரன் கத்திக் கூப்பாடு போடுவதுமில்லை; சண்டை வந்து விடுமோ என்ற கவலையும் அவனுக்கு இல்லை''