ஒரு நகரத்தில் படிப்பில் ஆர்வம் மிக்க இளைஞன் ஒருவன் இருந்தான்.
அவன் பல்துறைக் கல்விகளையும் கற்று முடித்தான்.
அவனுக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால், அவனுக்குக் கல்வி கற்றுத் தரத்தக்க தகுதியுடைய ஆசிரியர் யாரும் அந்த நகரில் இல்லை.
அந்த நகரத்திற்கு வந்த ஒருவர் அந்த இளைஞனிடம், “எங்கள் ஊரில் அறிவு நிரம்பிய பெரியவர் ஒருவர் இருக்கிறார். தம் முன்னோர் செய்து வந்த கொல்லன் தொழிலையே அவரும் செய்து வருகிறார். அவரிடம் நீ சென்றால் நன்கு கற்றுத் திரும்பலாம்'' என்றார்.
இதைக் கேட்ட இளைஞன் அந்தப் பெரியவரை நாடிப் புறப்பட்டான்.
நாற்பது நாட்கள் பயணத்திற்குப் பின்பு அந்த ஊரை அடைந்தான்.
அந்தப் பெரியவரின் கால்களில் விழுந்து வணங்கிய அவன், தனக்குக் கல்வி கற்றுத் தருமாறு வேண்டினான்.
“கல்வி கற்பதற்காக வந்துள்ளாயா?'' என்ற அந்தப் பெரியவர் உலைத் துருத்தியை அவன் கையில் தந்து அதை இயக்குமாறு சொன்னார்.
இளைஞனும் மறுமொழி பேசாமல் அதைச் செய்தான்.
பெரியவரும் தம் கொல்லன் தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் தம்மிடம் வருபவரிடம் உரையாடினாரே தவிர இளைஞனிடம் ஏதும் பேசவில்லை.
இப்படியே ஐந்தாண்டுகள் கழிந்தன. பொறுமை இழந்த இளைஞன், ''ஐயா! நான் கல்வி கற்பதற்காகத் தங்களிடம் வந்தேன்'' என்று தொடங்கினான்.
பெரியவரின் மற்ற மாணவர்கள் அவனை வியப்புடன் பார்த்தனர்.
ஆனால் பெரியவரோ, “நான் சொன்னபடி துருத்தியை இயக்கிக் கொண்டிரு'' என்றார்.
இளைஞனும் அமைதியானான்.
பெரியவரிடம் நாள்தோறும் கேள்விகள் வரும். தகுதியற்றவையாக இருப்பின் நெருப்பில் போட்டு விடுவார். தகுதியுள்ளவற்றைத் தலைப்பாகைக்குள் வைத்துக் கொள்வார். அவற்றிற்கு மாலையில் விடை தருவார்.
மேலும் ஐந்தாண்டுகள் கழிந்தன. ஒரு நாள் இளைஞனை அழைத்த பெரியவர், "உன் கல்வி முடிந்துவிட்டது. இனி நீ உன் ஊருக்குப் போகலாம்'' என்றார்.
வியப்படைந்த இளைஞன், ''ஐயா! எனக்குத் தாங்கள் எதுவுமே சொல்லித் தரவில்லையே?'' என்றான்.
அதற்குப் பெரியவர், "உலகத்திலுள்ள அனைத்துக் கல்வியிலும் தலையாயது பொறுமைதான். அது உனக்கு வந்துவிட்டது. இனி நீ கற்பதற்கு ஒன்றும் இல்லை'' என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.