சீடன் ஒருவன் தன் குருவைக் கண்டு வணங்குவதற்காகக் காணிக்கைப் பொருளுடன் சென்று கொண்டிருந்தான்.
அந்தக் குருவின் மீது ஏற்கனவேப் பொறாமை கொண்டிருந்த யோகி ஒருவர் அந்தச் சீடனை வழிமறித்தார்.
அவனைப் பார்த்து, “உன் குருவிற்கு எதுவுமேத் தெரியாது. அவர் ஒரு முட்டாள். நீ அவரை விடப் பெரிய முட்டாள். அதனால்தான் நீ அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டுள்ளாய். உன் குருவால் ஏதேனும் அற்புதம் செய்து காட்ட முடியுமா? என்னைப் போல் அவரால் நீரில் நடக்க முடியுமா? வானத்தில் பறக்க முடியுமா? அல்லது பூமியில்தான் புதைந்து கிடக்க முடியுமா? அவரால் எதுவுமே முடியாது. அப்படிப்பட்ட குருவிடம் சென்று, ஏன் உன் நேரத்தை வீணாக்குகிறாய்?" என்று தற்பெருமையுடன் கேட்டார்.
அதற்கு அந்தச் சீடன், ''நான் ஏன் அவரைக் குருவாகக் கொண்டிருக்கிறேன், மதிக்கிறேன், வணங்குகிறேன் தெரியுமா? அவர் எப்பொழுதும் பிறரைக் குறை சொல்லமாட்டார், கோபப்படமாட்டார். இவற்றைத்தான் நான் அற்புதங்களில் எல்லாம் மிகச் சிறந்த அற்புதம் என்று நினைக்கிறேன்'' என்று பதில் தந்தான்.
இதைக் கேட்ட யோகி தலைகவிழ்ந்தபடி அவ்விடத்தை விட்டுச்சென்றார்.