பேரறிஞராகிய டயோஜெனிஸ் மாவீரன் அலெக்சாண்டரின் ஆசிரியராக இருந்தார்.
'தான் மேம்பட்டவன், மற்றவர்களை விட உயர்ந்தவன்' என்ற எண்ணம் அலெக்சாண்டரின் உள்ளத்தில் ஊறியிருந்தது.
ஒரு நாள் அலெக்சாண்டர் ஆசிரியரைத் தேடி அவர் இல்லம் சென்றான்.
அப்பொழுது டயோஜெனிஸ் பல மனித மண்டை ஓடுகளை வைத்து ஒவ்வொன்றையும் மிகவும் உன்னிப்பாக உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார்.
நீண்ட நேரமாகியும் அலெக்சாண்டர் வந்ததை அவர் கவனிக்காமல் தம் செயலிலேயே ஈடுபட்டிருந்தார்.
பொறுமையிழந்த அலெக்சாண்டர் சிறு கனைப்புக் கனைத்தான். ஆசிரியர் திரும்பிப் பார்த்தார்.
"ஐயா! இந்த மண்டை ஓடுகளை வைத்து அப்படி என்ன ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள்?” என்று பணிவுடன் கேட்டான் அலெக்சாண்டர்.
"வேறொன்றுமில்லை, இதில் ஒன்று உன் தந்தையின் மண்டை ஓடு, மற்றவை அடிமைகளின் மண்டை ஓடுகள். இவற்றுள் எது உன் தந்தையின் மண்டை ஓடு என்று கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். ஆனால், இந்த மண்டை ஓடுகளிடையே என்னால் வேற்றுமையேக் காண முடியவில்லை. எல்லாம் ஒன்று போலவே இருக்கின்றன. உன்னால் முடிகிறதா பார்!” என்று சொன்னார் டயோஜெனிஸ்.
அதைக் கேட்ட அலெக்சாண்டரின் ஆணவம் அழிந்தது.