ஒரு காலத்தில் குருப் பிரதேசத்தில் ஆலங்கட்டி மழை பெய்து, வயல்களிலுள்ள தானியமெல்லாம் அழிந்து போனதனால் கடும் பஞ்சம் ஏற்பட்டது.
அங்கு ஒரு கிராமத்தில் மனைவியுடன் வசித்து வந்த உஷஸ்தி என்ற பண்டிதர், உணவுக்கு வழி தேடி வீட்டை விட்டுப் புறப்பட்டார்.
வழியில் ஓர் இடத்தில் மாவுத்தன் ஒருவன் அவல் பொரி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். பசியின் கொடுமை தாளாமல் உஷஸ்தி அவனிடம் கொஞ்சம் பொரி கேட்டார்.
தயக்கத்துடன் மாவுத்தன் கூறினான், "ஐயா! இது எச்சிலாகி விட்டதே?”
உஷஸ்தி கூறினார், "நீ அதைக் கொடு. நான் சாப்பிடுகிறேன்”
“மாவுத்தன் பொரியைக் கொடுத்துத் தனது பாத்திரத்திலிருந்து தண்ணீரும் கொடுக்கலானான்.
உடனே உஷஸ்தி, "வேண்டாம். அந்த தண்ணீர் எச்சிற்பட்டு விட்டது" என்று வாங்க மறுத்தார்.
வியப்படைந்த மாவுத்தன் கேட்டான், "பொரி மட்டும் எச்சில் இல்லையா?"
அதற்கு உஷஸ்தி பதில் கூறினார். "இந்தப் பொரியை மட்டும் இப்போது நான் சாப்பிடாமல் இருந்திருந்தால் கடும் பசி காரணமாக இதற்குள்ளாக நான் இறந்து போயிருப்பேன். இந்தப் பொரியைச் சாப்பிட்டதனாலேயே இப்போதைக்கு என் உயிர் காப்பாற்றப்பட்டது. இனித் தண்ணீரை எங்காவது தேடிச் சென்று குடித்துக் கொள்கிறேன். ஓர் ஆபத்து ஏற்படும்போது நித்திய நைமித்திக (சிறப்போடு பூசனை) விதி முறைகளை மீறியாவது உயிரைக் காத்துக் கொள்வது நெருக்கடி நேரத்துக்குச் சரி, அது ஆபத்தர்மம். ஆனால் நெருக்கடி இல்லாதபோது வரம்பு மீறுவதற்குச் சலுகை கேட்பது முறையல்ல”