“ராமா! நீ சூரியனோடு தொடர்புப்படுத்தியே எல்லாவற்றையும் செய்கிறாய். சூரிய வம்சத்தில் பிறந்தாய். சூரியன் உச்சத்திலிருக்கும் போது அவதரித்தாய். சூரிய குமாரனான சுக்ரீவனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தாய். ராவணனைக் கொல்ல சூரியனின் தயவை வேண்டி ஆதித்ய ஹ்ருதயம் சொன்னாய். ஆனால், என்னை நீ எதிலுமே தொடர்புபடுத்திக் கொள்ளவில்லை” என்று வருத்தப்பட்டு சொன்னான் சந்திரன்.
அதற்கு ராமன், “அடுத்த அவதாரத்தில் சந்திர வம்சத்தில் பிற்ந்து, பௌர்ணமியன்று ராசக்கிரீடையெல்லாம் செய்வேன். வருத்தப்படாதே!” என்றான்.
“அதுவரை எனக்குப் பொறுமையில்லை. இப்போதே நீ எனக்காக ஏதாவது செய்ய வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தான் சந்திரன்.
“சரி. வசிஷ்டர் எனக்கு ராமன் என்று பெயர் வைத்தார். இனி உன் பெயரையும் அதோடு சேர்த்து “ராமச்சந்திரன்” என்று அழைக்கப்படுவேன். சரிதானா?” என்றார்.
சந்திரன் மகிழ்ந்து போனான்.