ஆட்டுக்காரனும் ஐ.டி.காரனும்...!
நெடுஞ்சாலையை ஒட்டி பச்சைப் பசேலென இருந்த திறந்த புல்வெளி. அதில் ஒரு ஆட்டுக்காரன் தன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது எங்கிருந்தோ அதிவேகமாக வந்த பென்ஸ் கார் ஒன்று கிரீசசிட்டு நின்றது.
ஆட்டுக்காரன் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தான்.
அமெரிக்க பாணியில் கோட்டும் சூட்டுமாக இறங்கிய மிடுக்கான வாலிபன் ஆட்டுக்காரனிடம் வந்து "உன் மந்தையிலிருக்கும் ஆடுகளின் எண்ணிக்கையை நான் சரிவரக் கூறினால் நீ எனக்கு நான் கேட்கும் ஆட்டைப் பரிசாகத் தருவாயா?" எனக் கேட்டான்.
ஆட்டுக்காரன் செய்வதறியாமல் 'சரி'' எனத் தலை அசைத்து வைத்தான்.
உடனே, அவ்வாலிபன் தன் வாகனத்துக்குத் திரும்பி அதிலிருந்த லாப் டாப்பை எடுத்தான். தன் செல்பேசியையும் வேறு சில கருவிகளையும் அத்துடன் பொருத்தினான். அதிலிருந்த கருவி ஒன்றை எடுத்து திறந்த வெளியைப் படமெடுத்து ஏதேதோ கணித்தான். பிறகு தன்னிடமிருந்த சிறிய அச்சுப் பொறியை எடுத்து அதிலிருந்து நூற்றிருபது பக்க அறிக்கையை அச்செடுத்தான்.
பின்னர் நேரே ஆட்டுக்காரனிடம் வந்து " உன் மந்தையில் 1346 ஆடுகள் உள்ளன. சரியா? '' என்றான்.
ஆட்டுக்காரன் ஆச்சரியமும் புன்னகையும் கலந்த முகத்துடன் " நீ சரியாகக் கூறினாய். ஆகவே, உனக்குப் பிடித்த ஆட்டை நீ எடுத்துக் கொள் " என்றான்.
அவ்வாலிபனும் மந்தைக்குள் தேடி தனக்குப் பிடித்த பிராணியைப் பிடித்து தன் வாகனத்தின் பின்னால் திணித்துக் கொண்டான்.
அந்த நேரத்தில் அவனருகில் வந்த ஆட்டுக்காரன், " சரி, இப்போது நான், நீ செய்யும் தொழில் எது என்பதைச் சரியாகக் கூறினால் நீ என்னிடம் பெற்ற பிராணியை எனக்குத் திருப்பித் தருவாயா? '' எனக் கேட்டான். அவ்வாலிபனும் சம்மதித்தான்.
ஆட்டுக்காரன் கேட்டான், " நீ தகவல் தொழில்நுட்ப ஆலோசகன் தானே? "
அவ்வாலிபன் கேட்டான், " உனக்கு எப்படித் தெரிந்தது.? "
ஆட்டுக்காரன் சொன்னான், அதுவா? மிக எளிது! முதலாவதாக நீ எவருடைய அழைப்புமின்றி இங்கு வந்தாய். அடுத்ததாக நீ எனக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றுக்காக என்னிடமே கட்டணமாக ஒரு பிராணியைக் கேட்டாய். மூன்றாவதாக, உனக்கு என்னுடைய தொழிலைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆகவே, இப்போது நான் என்னுடைய நாயை திரும்ப எடுத்துக் கொள்ளலாமா? " என்றான்.
'உருவத்தைப் பார்த்து எவரையும் எடைபோடாதே' என்று அப்பா சொன்னது நினைவுக்கு வர, அவ்வாலிபன் தனது காரை முடுக்கினான்.
- டாக்டர். இமாம் கவுஸ் மொய்தீன்
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.