சிவனால் சபிக்கப்பட்ட பார்வதிதேவி, மீண்டும் சிவனை அடைவதற்காகக் காட்டில் தவமிருந்தாள்.
ஒருநாள் அலறல் சத்தம் கேட்டது.
சிறுவன் ஒருவன் முதலையின் வாயில் சிக்கி அலறினான். இதைக்கண்ட பார்வதி, சிறுவனை விடுவிக்கும் படி முதலையிடம் வேண்டினாள்.
”இந்தச் சிறுவனை விட்டுவிட்டால் எனது உணவுக்கு எங்கே போவேன்?” என்றது முதலை.
”எனது தவப்பயன் முழுவதையும் உனக்கு தருகிறேன். நீ சிறுவனை விட்டுவிடு” என பார்வதி நெகிழ்ச்சியுடன் சொன்னாள்.
“உங்கள் தவப்பயனைக் கொடுத்து விட்டால் உங்களால் சிவனை மீண்டும் அடைய முடியாதே. என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றது முதலை.
”தவத்தை மீண்டும் ஒரு முறை செய்துகொள்ளலாம். ஆனால், சிறுவனின் உயிர்போனால் திரும்ப வருமா? இப்போது செய்த தவப்பயன் மட்டுமல்ல. ஏற்கனவே என்னிடம் உள்ள அனைத்து தவப்பலனையும் உனக்கு அளிக்கிறேன். குழந்தையை விட்டுவிடு” என்றாள் கருணையுள்ள லோகமாதா.
முதலை சிறுவனை விட்டது. அத்துடன் சிவனாக உருவெடுத்தது.
பின்னர், “முதலையாக வந்ததும் நானே. சிறுவனும் நானே. உனது அன்பின் ஆழத்தை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு செய்தேன். தானம், தவம் ஆகியவற்றின் பலன் செய்பவருக்கு உரியதல்ல. பிறருக்கு அதை அர்ப்பணித்தால் அதுவே பல்கிப் பெருகும்” என்றார் சிவன்.