ஒரு சமயம், அறிவாளியான ஒரு பூசாரி இருந்தார். சாமர்த்தியமாகவும் திகழ்ந்தார். சகல வேத நூல்களையும் கற்றிருந்தார். அவர் ஆன்மீகக் கொள்கைகளுடன் இருந்ததனால், இடம் இடமாகப் பிரயாணம் செய்து, பல சமூக மக்களுக்குக் கல்வி புகட்டி வந்தார்.
ஒரு முறை கிராமம் ஒன்றிற்குச் சென்ற பொழுது, ஒரு ஏரியைச் சுற்றிப் பயணம் செய்தார். அதன் மத்தியில் ஒரு தீவு இருந்தது.
அத்தீவில் ஒரு மனிதன் வசித்து வந்தான். மிகவும் சாதாரணமாக இருந்ததனால் பலரும் அவனை மூடன் என எண்ணினர்.
பூசாரி ஏரியை வந்தடையும் போது “பஜ கோவிந்தம் புஜ கோவிந்தம் மூட மதே——லலலா………”என யாரோ பாடும் ஒலி கேட்டது. ஆனால் அம்மூடனின் உச்சரிப்பு பயங்கரமாக இருந்தது.
அம்மனிதனுக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியவில்லை. ஒரு நிமிடம் அம்மனிதனின் பாட்டைக் கேட்ட பூசாரி தன் மனதுக்குள் எண்ணலானார், “கடவுளே! இதைக் கேட்கும் என் காதுகள் வலிக்கின்றன. இம் மனிதன் இவ்வளவு தவறுகள் செய்கிறானே? நான் எப்படியும் இம் மனிதனுக்கு உதவ வேண்டும்”
இரக்கம் கொண்ட பூசாரி ஒரு படகில் ஏறி, மூடனுக்குக் கற்றுக்கொடுக்கும் எண்ணத்துடன் அத்தீவைச் சென்றடைந்தார்.
அம்மனிதனுக்கு வணக்கம் கூறி, தான் கற்றுக்கொடுக்க வந்திருப்பதாகக் கூறினார். அம்மனிதன் நல்வரவைத் தெரிவித்துக் கொண்டு, பூசாரி வந்ததைத் தன் பாக்கியமாகக் கருதி, அவருக்கு உணவும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்தான்.
பூசாரி மூன்று நாட்கள் அங்கேயே தங்கி, பல நூல்களைக் கற்றுக்கொடுத்தார். ஸ்லோகங்களை உச்சரிக்கும் முறையையும், பல உண்மைக் கதைகளையும், ஆன்மீகக் கதைகளையும் சொன்னார். மூன்று நாட்கள் கழிந்த பிறகு, தீவில் இருந்த மனிதன் தான் கற்றுக்கொண்டதை எண்ணிச் சந்தோஷப்பட்டு, பூசாரிக்கு நன்றி கூறினான்.
விடை பெற்று பூசாரி திரும்பிச் செல்லும் பொழுது கண்ட காட்சி பிரமிப்பாக இருந்தது.
அம்மூடன் தண்ணீர் மீது ஓடிக் கொண்டிருந்தான்!!!
அவன் பூசாரியிடம் ஓடி வந்து “பண்டிதரே, தாங்கள் கற்றுக் கொடுத்த சிலவற்றை மறந்து விட்டேன் என கூறிச் சில சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டான்.
அதைக் கண்ட பூசாரி, ஒரு நிமிடம் ஆச்சரியத்துடன் பார்த்தார். பிறகு மூடன் கேட்ட சந்தேகங்களுக்குச் சரியான விளக்கம் கூறினார். உடனே மூடன் “ஹா ஹா” என சிரித்துக் கொண்டே மறுபடியும், தண்ணீரின் மீது தீவு நோக்கி ஓட ஆரம்பித்தான்.
பூசாரி சற்று சிந்திக்கலானார். நாம் இவ்வளவு கற்றிருக்கிறோம்;ஆனால் தீவில் உள்ள மனிதன் அதைக்காட்டிலும் நிறைய கற்றவன். அம்மனிதனுக்கு ஆன்மீக சக்தி மட்டும் அல்ல, ஆழ்ந்த பக்தியும் இருக்கிறது. பூசாரி மனதில் எண்ணினார். தீவில் உள்ள மனிதன் மூடனே அல்ல. அவனைப் போன்ற சிறந்த பக்திமானுடன் ஒப்பிடும் போது நானே மூடன்.
உண்மையை உணருபவனே சிறந்த பூசாரி