ஒரு வியாபாரி தனது வீட்டில் குதிரையும், கழுதையும் வைத்திருந்தான். வியாபாரத்திற்காக தனது பொருட்களைக் கழுதையின் முதுகு மீது கட்டுவான். குதிரை மீது தான் அமர்ந்தவாறு கழுதையினை இழுத்துச் செல்வான். பொருட்கள் எடுத்து செல்லும் எல்லா ஊரிலும் வியாபாரியின் பொருட்கள் நன்றாக விற்பனையானது. அந்த வியாபாரிக்கு நல்ல லாபம் கிடைத்தது. அதனால், வழக்கத்திற்கு மாறாக விற்பனைக்கு அதிகப் பொருட்கள் எடுத்துச் செல்லலாம் என்று தீர்மானித்தான்.
அடுத்த நாள் வியாபாரத்திற்குக் கழுதையின் மூதுகில் ஒரு மூட்டைக்கு பதிலாக இரண்டு மூட்டையைக் கட்டினான். கழுதையால் சுமக்க முடியாமல் பாதி வழியில் திணறியது. வேறு வழியில்லாமல் ஒரு மூட்டையைத் தான் சுமந்தவாறு குதிரையில் பயணம் செய்தான். சிறுது தூரம் சென்றதும் குதிரை கடிவாளம் பிடித்துக் கொண்டு மூட்டையை வியாபாரியால் சுமக்க முடியவில்லை. அதனால், இரண்டு மூட்டையை குதிரை மீது கட்டினான். குதிரையின் முதுகில் விற்பனை பொருட்கள் இருந்ததால் அந்த வியாபாரி குதிரை மீது அமர முடியவில்லை. வேறுவழியில்லாமல் கழுதை மீது அமர்ந்துக் கொண்டு பயணம் செய்தான்.
வியாபாரியின் எடையையை விட இரண்டு மூட்டைகளின் எடை குறைவாக இருந்ததால் குதிரை சந்தோஷமாக நடந்து வந்தது. ஆனால், இரண்டு மூட்டையை சுமக்க முடியாமல் கஷ்டப்பட்டு நடந்து வந்த கழுதை, வியாபாரியைச் சுமக்க முடியாமல் அங்கேயேச் சோர்ந்து விழுந்தது. அதன் பிறகு வழக்கமாக சுமக்கும் ஒரு மூட்டை எடையைக் கூடச் சுமக்க முடியவில்லை.
வியாபாரத்திற்கு சரியான நேரத்தில் சென்றால்தான் இரண்டு மூட்டை பொருட்களையும் அந்த வியாபாரியால் விற்பனை செய்ய முடியும். இப்போது ஒன்றுக்குமே உதவாத கழுதையை என்ன செய்வது என்று யோசித்தான்.
வேறு வழியில்லாமல் கழுதையை அங்கேயே விட்டுவிட்டுக் குதிரையோடு நடந்து பயணம் செய்தான். யாரும் உதவி செய்ய முடியாததால் கழுதை அங்கேயே இருந்தது. வியாபாரி நடந்து சென்றதால், நேரத்திற்குச் செல்ல முடியவில்லை. வியாபாரமும் எதிர்பார்த்தபடி அமையவில்லை.
இதிலிருந்து என்ன தெரிகிறது...?
கழுதைக்குக் கொடுக்க வேண்டிய வேலையைக் குதிரைக்கும், குதிரைக்குக் கொடுக்க வேண்டிய வேலையைக் கழுதைக்கும் கொடுத்தால் அந்த வேலை உருப்படாது. மேலும், பின்னால், நமக்குத்தான் தேவையில்லாமல் அதிக வேலைச் சுமை வந்து சேரும்.