மிகப் பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு நான்கு பிள்ளைகள். நால்வருக்கும் திருமணம் ஆகியது.
ஆனால், அந்த மருமகள்கள் ஒவ்வொருத்தியும் முன்கோபக்காரிகளாக இருந்தார்கள். தினமும் பொழுது விடிந்து, பொழுது போனால் ஒரே சண்டையும் சச்சரவும்தான். இதைப் பார்த்து மனம் வருந்திய திருமகள், அந்த வீட்டை விட்டு வெளியேற நினைத்தாள்.
திருமகள் ஒருநாள் இரவு அந்தச் செல்வந்தரின் கனவில் தோன்றி, “தினமும் இந்த வீட்டில் பொழுது விடிந்து பொழுது போனால் சண்டையும் சச்சரவுமாக இருக்கிறது. இதுபோன்ற இடத்தில் நான் ஒருபோதும் இருக்கமுடியாது” என்றாள்.
நடுநடுங்கிப் போன செல்வந்தர் திருமகளின் கால்களை பிடித்துக்கொண்டு, “தாயே, நான் உன்னுடைய தீவிர பக்தன். என்னை விட்டு நீ சென்றுவிட்டால், நான் என்ன செய்வேன். என்னால் வாழவே முடியாது” என்று கதறினார்.
லட்சுமிதேவிக்குச் செல்வந்தர் மீது கருணை பிறந்தது. “சண்டை சச்சரவு இருக்கும் இடத்தில் என்னால் இருக்கமுடியாது. வேறு ஏதாவது வரம் வேண்டுமானால் கேள்” என்றாள்.
உடனே அந்தச் செல்வந்தர் சாதுர்யமாக, “மிகவும் நல்லது அம்மா! என் வீட்டில் எல்லோரும் அன்புடன் வாழ அருள் செய்வாய். இதுதான் நான் கேட்கும் வரம்” என்றார்.
லட்சுமி தேவியும் அப்படியே வரம் கொடுத்து மறைந்தாள். மறுநாளில் இருந்து அந்த வீட்டில் அனைவரும் அன்புடனும் ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்ந்து வந்தனர்.
ஒருநாள் அந்தச் செல்வந்தர், லட்சுமி தேவி தன்னுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டதாகக் கனவு கண்டார். தேவிக்குப் பணிவுடன் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டார். மீண்டும் தன்னுடைய வீட்டில் எழுந்தருளியதற்காக நன்றி தெரிவித்தார்.
தேவி கூறினாள், “இதில் நன்றி தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை. எங்கே அன்பும் ஒற்றுமையும் நிலவுகிறதோ, அங்கே நான் அழையாமலேயே சென்று குடியேறிவிடுகிறேன்” என்றாள்.