மன்னன் ஒருவன், குரு ஒருவரிடம் தனது மகனைப் படிக்க வைக்க அழைத்து வந்தான்.
அவனது ஆட்சியில் மக்கள் எந்தளவு துன்பப்படுகிறார்கள் என்பதை அவர் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார். எனவே, அந்த மன்னனைக் கடுமையாகக் கண்டித்தார்.
மன்னனுக்கு கடும் கோபம் வந்தாலும், இளவரசனின் படிப்பு முடிந்ததும் முனிவரைக் கவனித்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டான்.
இளவரசனின் படிப்பு முடிந்தது.
குருவிடம் அவன் தட்சணை அளித்த போது, "எனக்குத் தேவைப்படும் போது வாங்கிக் கொள்கிறேன்'' என்று கூறி அனுப்பி விட்டார்.
இளவரசன் அரண்மனைக்கு வந்ததும், முனிவரைப் பழி வாங்கும் நோக்கில், மன்னன் படையாட்களை அனுப்பிக் காட்டிலுள்ள குருகுலத்தைச் சேதப்படுத்தி விட்டான்.
இதையறியாத இளவரசன் சிறிது காலம் கடந்து, குருதட்சணையுடன் மீண்டும் சென்றான். முந்தைய இடத்தில் குருகுலம் இல்லை.
சுற்றித்திரிந்து, ஒரு ஆற்றங்கரையில் குரு மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்ததைக் கண்டான்.
குருகுலம் ஏன் இடம் மாறியது என்பதைச் சேவகன் மூலம் அறிந்தான்.
தந்தை மீது கடும் கோபம் வந்தது. அதை வெளிக்காட்டாமல், குருவிடம் சென்று தட்சணையை பெற்றுக் கொள்ளுமாறு இளவரசன் வேண்டினான்.
"இப்போதும் எனக்கு இது தேவையில்லை, தேவைப்படும் போது நானே கேட்டு வாங்கிக் கொள்கிறேன்” என்று முனிவர் கூறிவிட்டார்.
அரண்மனைக்குத் திரும்பிய இளவரசனின் பின்னால், அவனே அறியாமல் அவரும் குதிரையில் வந்தார்.
கோபத்துடன் தந்தை முன் சென்ற இளவரசன், "ஆட்சியின் அவலத்தைச் சுட்டிக்காட்டிய குருவையா அவமதித்தீர்?'' என்று கேட்டுத் தந்தையை வெட்ட வாளை ஓங்கினான்.
அப்போது, அவனைத் தொடர்ந்து வந்த முனிவர், "மகனே, பொறு! எனக்குக் குருதட்சணை இப்போது வேண்டும். அதைக் கொடுத்துவிட்டு, உன் தந்தையைக் கொல்'' என்றார்.
எதிர்பாராமல் குருவைக் கண்ட இளவரசன் திகைத்துப் போய், நவரத்தினங்களும்,பொன்னும், மணியும் அடங்கிய தட்டை நீட்டினான்.
"சிஷ்யனே! நான் கேட்பதை தருவாயா?'' என்றதும்,
"தருவேன்'' என்றான் இளவரசன்.
"உன்னுடைய கோபத்தை எனக்கு அளிக்க வேண்டும்'' என்று அவர் கூறவே, அவன் தலை குனிந்து வாளைக் கீழே போட்டான்.
கோபப்படுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை...!