சுந்தரம் தான் இருக்கும் ஊரிலிருந்து அடுத்த ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. நான்கு மைல் நடந்துதான் அவ்வூருக்குச் செல்ல முடியும். அவன் காலையில் கிளம்பினான். செல்லும் வழியில் வயலில் பூசணிக்கொடிகள் பரவியிருந்தன. ஒவ்வொன்றிலும் பல பூசணிக்காய்கள் காய்த்திருந்ததைப் பார்த்து அதிசயித்தபடி நடந்தான்.
சிறிது நேரத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாகயிருந்ததால், அவனுக்கு வியர்க்கத் தொடங்கியது. களைப்ப்டைந்த அவன், அருகில் எங்காவது, சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு செல்ல முடிவு செய்தான்.
அங்கே சற்றுத் தொலைவில் அரசமரம் ஒன்றிருப்பதைக் கண்டான்.
அம்மரத்தின் அடியில் சென்று, அதன் நிழலில் படுத்தபடி மேல் நோக்கிப் பார்த்தான்.
அந்த அரச மரத்தில் காய்கள் நிறைய இருந்தாலுன், அவையனைத்தும் மிகச் சிறியதாக இருந்தன.
உடனே அவன், 'கடவுள், தரையில் படர்ந்திருக்கும் சிறிய பூசணிக்கொடிக்கு பெரிய காய்களையும், வான் நோக்கி உயர்ந்து நிற்கும் இந்தப் பெரிய மரத்திற்குச் சிறிய காய்களையும் படைத்திருக்கிறாரே... அவருக்குச் சிறிது கூடச் சிந்திக்கும் திறனில்லையே... ' என்று நினைத்தான்.
அப்போது மரத்திலிருந்து சிறிய காய் ஒன்று உதிர்ந்து அவன் முகத்தில் வந்து விழுந்தது. உயரத்திலிருந்து விழுந்ததால், அந்தக் காய் சிறியதாக இருந்தாலும், அவனுக்கு அது சிறிது வலியைத் தந்தது.
உடனே அவன், 'கடவுள் காரணமில்லாமல் இப்படிப் படைக்கவில்லை. இந்த மரத்தில் பூசணிக்காய் அளவு காய்கள் இருந்திருந்தால்... இந்நேரம் என் முகம் வீங்கிப் போயிருக்குமே' என உணர்ந்தான்.
தனது அறிவீனத்தை எண்ணி வெட்கமடைந்தான்.
இறைவன் காரணமில்லாமல் எந்த ஒன்றையும் செய்வதில்லை, படைப்பதில்லை.