சோதிடப் பழமொழிகள்
சோதிடம், சாஸ்திரம், பிரம்மன் கணக்கு, விதி, உத்தராயணம், பூமி, மரணம், வானியல் - கணக்கு, கணக்கன், கணக்கன் - தொழில் ஆகிய இவை தொடர்ந்த பழமொழிகளைக் காண்போம்.
சோதிடம்
* இளமை சோதிடம்; முதுமை வைத்தியம். (பிரம்மபுத்திரன், தன்னிகரில்லா தமிழகத்துப் பழமொழிகள், ப.39.)
* பால ஜோதிடம்; விருத்த வைத்தியம் சிறப்பு. (மேலது, ப.180.)
* பால சோதிடன் விருத்த வைத்தியன். (மேலது, ப.113.)
* வால ஜோசியனும், விருத்த வைத்தியனும் நன்று. (மேலது, ப.264.)
* பால்ய சோதிடம் விருத்த வைத்தியடி.
* சோதிடத்துக்குப் பாலியமே போதும்.
* சோசியம் சொல்லப் பாலியம் போதும். (துர். த.நா.ப, ப.158.)
* வைத்தியன் கையைப் பிடிப்பான் ஜோதிடன் காலைப் பிடிப்பான்.
* கை பார்த்து வைத்தியம் பார். கால் பார்த்து சோதிடம் பார்.
சாஸ்திரம்
* சூத்திரவேதன் சாஸ்திரம் பார்ப்பான். (மே. ப.150.)
* கோத்திர ஈனன் சாத்திரம் பார்ப்பான். துர்.த.நா.ப, ப.158.)
* சாஸ்திரம் பார்க்காத வீடு சமுத்திரம்.
* சாத்திரம் பாராத வீடு, சமுத்திரம் பார்த்த வீடு தரித்திரம். (மேலது, ப.120.)
* சித்திர புத்திரனுக்குத் தெரியாமல் சீட்டுக் கிழியுமா? (பிரம்மபுத்திரன், தன்னிகரில்லா தமிழகத்துப் பழமொழிகள்,121.)
* சாஸ்திரத்தைச் சுட்டுச் சதுர் மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு சுகம் பெறுவது எக்காலம்? (மேலது,ப.138.)
* சாஸ்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள், கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு. (மேலது, ப.138.)
* சாஸ்திரம் பொய்யென்றால் கிரகணத்தைப் பார். துர்,த,நா,ப, ப.137.) மேலது,ப.139.
* பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும். (மேலது, ப.200.)
பிரம்மன் கணக்கு
* அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது.
* அயன் இட்ட கணக்கு யாருக்கும் தப்பாது.
* அயன் அளந்த படி. (மேலது, ப.18.)
விதி
* விதி போகும் வழியே மதி போகும்.
* எல்லாத் தலையிலும் எட்டு எழுத்து; பாவி என் தலையில் பத்து எழுத்து. (மே.ப.64).
* எழுதிய விதி அழுதால் தீருமா? (து.த.நா.ப,ப.53)
* சாபமிட்டாருண்டோ? தலையில் திரு எழுதாதோ? வேக விட்டாருண்டோ? எழுத்தின் படிதானோ? (மேலது, ப.139).
உத்தராயணம்
மக்கள் நாளுக்கும், கிழமைக்கும் அடிமையாகவில்லை என்பதையே, “உத்தராயணம் என்று உறியைக் கட்டிக் கொண்டு சாவதா” எனும் பழமொழி குறிக்கப் படுகின்றது. (பு.நோ.ப, ப.67.)
பூமி
* பூதலம் யாரும் போற்றும் முச்சுடர்.
* பூமியைத் திருத்தி உண்.
* பூமியைப் போலப் பொறுமை வேண்டும். (துர்,த.நா.ப, ப.219.)
* அஷ்ட புத்திர வெகுபாக்ய நமஸ்து, (மேலது, ப.9.)
* காட்டுப்பூனைக்குச் சிவராத்திரி விரதமா? (பிரம்மபுத்திரன், தன்னிகரில்லா தமிழகத்துப் பழமொழிகள், ப.86.)
பஞ்சாங்கம்
* பஞ்சாங்கம் மனிதன் படைத்தான்; கடவுள் பருவங்களைப் படைத்தார். (சு,ல,உ.ப, ஸ்வீடிஷ் பழிமொழி ப.99)
* பஞ்சாங்கம் கெட்டுப் போனாலும் நவக்கிரகம் கெட்டுப் போமோ?
* பஞ்சாங்கம் பார்த்தால் பல சாத்திரம்; கஞ்சி குடித்தால் கல மூத்திரம். (துர்,த,நா,ப, ப.199.)
* வைத்தியன் அதிகாரம் சாகிற வரைக்குத் தான். பஞ்சாங்கக்காரனோ செத்தாலும் விட மாட்டான். (மேலது, ப.237.)
* அழகு, பஞ்சாங்கத்தைப் போன்றது. அது ஒரு வருடம் நிலைத்திருந்தால் நல்லது தான். (டி.ஆடம்ஸ், முனைவர். சரளா இராஜகோபாலன், பெ.ப.பொ.மொ, ப.137)
* பழைய பஞ்சாங்கம் படி காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களைக் கூறுதல்; வயதானவர்கள் என்றால் பழைய பஞ்சாங்கம் படிப்பார்கள் என்பதை உன் தாத்தா பொய்யாக்கி விட்டார். பழைய பஞ்சாங்கம் (நபரைக் குறிப்பது) அந்தப் பழைய பஞ்சாங்கத்திடம் போய் ஆலோசனை கேட்பதில் என்ன பயன்? (த.த.அ, ப.248.)
மரணம்
* மரணத்திற்குப் பஞ்சாங்கமில்லை. (ஜசு,ல, உலகப்பழமொழிகள், ரஷ்யப் பழமொழி, ப.400, (11) )
* சாகிற வரையில் வைத்தியன் விடான். செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன். (துர், த,நா,ப, ப.137.)
* சந்தியா காலத்தில் கற்ற வித்தை பயன் தராது.
- இது குறித்து ம.த.ஜோ, உரிய கால - நேரத்தில் நாம் கற்றுக் கொண்ட வித்தையை மற்றவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், கலையைக் கற்றுக் கொண்டவருக்கும், கற்றுக் கொடுத்தவருக்கும் பயன் இராது என்பதே இதன் பொருள் என்கின்றார். (ம.த.ஜோ, சு.ப.மொ.வி, ப.95.)
* சோதிடத் தொழில் கணிதத்தொழிலில் அடங்கும். எனவே கணக்கர் என்று அழைப்பர். அக்குலத்தார் கணக்குப்பிள்ளை என்றும் கருணீகர் என்றும் அழைக்கப் பெறுவர்.
வானியல் - கணக்கு
* கணக்கைப் பற்றிய மனிதனின் அறிவு சுருக்கம், வானின் கணக்கில் பெரிய பெரிய தொகைகளே உண்டு. சீனா (ப.ரா, உ,ப, ப.39.)
கணக்கன்
* புள்ளிக் கணக்கன் பள்ளிக்கு ஆவானா? (துர், த,நா,ப, ப.218.)
* பசித்த கணக்கன் பழங்கணக்கு பார்த்தது போல, (பிரம்மபுத்திரன், த.த.ப.மொ, ப.170.)
கணக்கன் - தொழில்
*கணக்கன் கணக்கு அறிவான் தன் கணக்கைத் தானறியான். (ப.114)
* கணக்கன் கண் வைத்தால் கால் காணி பொட்டை.
* கணக்கனைப் பகைத்தாயோ? காணி இழந்தாயோ?
* கணக்கனைக் கண்ட இடத்தில் குத்து.
* கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும். (ப.126.)
* சென்ற இடம் சிறப்பும், கொண்ட இடம் காணியும். (மேலது, ப.129.)
* ஜல மண்டலி கடித்தால் பரமண்டலம் தான்.
ஆக பழங்காலம் தொட்டு பழமொழிகள் வழக்கினில் பயன்பாட்டுடன் நிலவி வருகின்றன.
தொகுப்பு:- முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.