* தன்னலம் என்பது ஒரு வெறி. பாம்பின் நஞ்சினும் கொடியது. இந்நஞ்சின் வழிப்பட்டவர்கள் பெற்றுள்ள கல்வி, பக்தி-யாவும் பயனற்றவையே.
* இன்றைய சமுதாயத்திற்குப் பணத்தின்மீது மட்டுமே ஆசை. பணம் கிடைக்கக்கூடிய வழிகளில் அல்ல.
* தாழ்வான கூரை உள்ள வீட்டில் எளிதில் தீப்பிடிக்கும். அதுபோல தாழ்வான நோக்கங்கள் உடையவர்கள் எளிதில் பகை கொள்வர்.
* பணி செய்த ஆண்டுகளைக் கணக்கிட்டுத் திறமைகளைக் கணக்கிட முடியாது. பணி செய்யும் பாங்கும் திறமையுமே அளவுகோல்கள்.
* காலந் தவறுதலை ஒழுக்கக்கேடு என்று உணராதவரை சமூகம் வளராது.
* சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு கானா விட்டால் புதிய சிக்கல்கள் தோன்றும்.
* திட்டமிட்டுச் செய்யாத பணிகளில் பணமும் பாழாகிறது. பயனும் இல்லாமல் போகிறது.
* இதுவரை தோன்றிய எந்த ஞானியின் அடிச்சுவட்டிலும் மனித உலகம் செல்லவில்லை. மனம் போன போக்கிலேயே போய்க் கொண்டிருக்கிறது.
* தமிழ் இருக்கும் இடத்திலேயே தமிழர் இருப்பது என்று உறுதி எடுப்பாரானால் தமிழ் வளர்ந்து ஓங்கும்.
* சமூக வாழ்க்கையின் சுதந்திரம் என்பது கட்டுப்பாடுகளுக்குட்பட்டதே!
* அரைகுறைகள் மற்றவர்கள் சொல்வதை மதித்துக் கேட்கமாட்டார்கள்.
* சலுகைகளால் ஒரு சமுதாயத்தை வளர்த்து விட முடியாது.
* ஆசைகள் ஒவ்வொன்றும் சுதந்தரத்திற்குப் போடப்படும் விலங்குகள்.
* ஒற்றுமையை விரும்புகிறவர்கள் காரண காரியங்களை ஆராய மாட்டார்கள்!
* மோசமான மனிதர்கள் எதிர்கால விளைவுகளைப் பற்றிக் கவலையே படமாட்டார்கள்.
* மதங்கள் தோன்றிய பிறகுதான் சமூகம் சீரழிந்தது.
* மிகச் சிறிய செயல்களையும் கவனத்துடன் செய்து பழகினால் மிகப்பெரிய காரியங்களையும் சிறப்பாகச் செய்ய முடியும்.
* தவறுகளைக் கூட ஏற்கலாம். ஆனால் முறைகேடுகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
* பெண் தனித்திருக்க முடியாது என்ற கருத்து பிழையானது.
* அலட்சியங்கள் கோடிக் கணக்கில் இழப்பைத் தரும்.
* ‘நாலுபேர்’ நன்மைக்கு மட்டுமல்ல; தீமைக்கும் சேர்கிறார்கள்.
* ஒரு மணி நேரம் சொற்பொழிவு நிகழ்த்த, பல மணி நேரம் படிக்க வேண்டும்.
* தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல. தமிழே ஒரு நாகரிகமாகவும் சமயமாகவும் வளர்ந்துள்ளது.
* பணத்தின் மீது நேரிடையாக ஆசை காட்டுவது தீது, பணம் வரும் வாயில்களில் ஆர்வங் காட்டுவது அறிவுடைமை.
* உடலை வளர்த்தவர்கள், உணர்வை வளர்த்துக் கொள்ளத் தவறிவிட்டார்கள்.
* பதவியைப் போல மனிதனைக் கெடுப்பது வேறு ஒன்றும் இல்லை.
* உடலுக்கு நோய் வந்தால் விரைந்து மருத்துவம் செய்துகொள்ளும் மனிதர்கள் உள்ளத்திற்கு வரும் நோய்களுக்கு மருத்துவம் செய்துகொள்ள முயலுவதில்லை.
* மனிதன் எப்போதும் போர்க்குணம் உடையனவாக விளங்கவேண்டும்.
* தவறுகள் செய்வது குற்றமன்று. தவறுகளை நியாயப் படுத்துவதே குற்றம்.
* தாய்மொழிக் கல்வி, கற்ற அறிவைப் பன்மடங்கு விரிவாக்கும்.
* எதிர்பார்த்துச் செய்தல் என்பதே சிறந்த செயற்பாடு.
* பொது மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை ஆட்சியாளர்கள் யோக்கியர்களாக மாட்டார்கள்.
* செல்வத்தின் அருமை தெரியாதவர்கள் செலவினங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
* நேரிடையாகக் கல்வி போதிப்பதைவிட, செய்முறைகள் மூலம் படிப்பித்தல் நல்லது.
* வகுப்பறைக்குள் போதிப்பதைவிட வகுப்பறைக்கு வெளியே நிறைய கற்பிக்கலாம்.
* ஒன்றுமே செய்யாதவனை விட, பயனற்றவைகளைச் செய்பவன் பரவாயில்லை.
* ஒழுங்குகள் நலம் பயப்பனவேயன்றித் துன்பம் தருவன அல்ல.