வால்மீகி ராமாயணத்தில், அயோத்தியா காண்டத்தில் ராமன் வாய் மொழியாகக் கூறிய 16 சுலோகங்களும் அதற்கான விளக்கங்களும் இங்கு தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.
சுலோகம்
“சர்வே க்ஷயஅந்தா நிசயா: பதன அந்த: சமுக்ச்ரயா:
சம்யோகா விப்ரயோக அந்தா மரண அந்தம் ச ஜீவிதம்”
பொருள்
சேர்ந்தன எல்லாம் கரையும்; உயர்ந்தன தாழும்; சேர்ந்தவர் பிரிவர்; பிறப்பவர் இறப்பர்.
*****
சுலோகம்
“யதா பலானாம் பக்வானாம் ந அன்யத்ர பதனாத் பயம்
ஏவம் நரஸ்ய ஜாதஸ்ய ந அன்யத்ர மரணாத் பயம்”
பொருள்
பழுத்த பழங்கள் கீழே விழ வேண்டும்; அது போல இருப்பவர்கள் இறப்பர். அவைகள் பயப்படுவதில்லை.
*****
சுலோகம்
"யதா காரம் த்ருஅ ஸ்தூணம் ஜீர்ணம் பூத்வா அவசீததி
ததா வசீதந்தி நரா ஜரா ம்ருத்ய வசம் கதா:"
பொருள்
உறுதியான கட்டிடங்கள் இடிந்து விழும்; அழிந்து போகும். அதைப் போல வயதும் மரணமும் வந்தே தீரும்.
*****
சுலோகம்
“அன்யேதி ரஜனீ யா து சா ந ப்ரதிநிவர்தத
யாத்யேவ யமுனா பூர்ணா சமுத்ரமுதகாகுலம்”
பொருள்
இரவுப் பொழுது கழிந்துவிட்டால் திரும்பி வாராது; யமுனை நதி அதன் தண்ணீரைக் கடலில் கொட்டிவிட்டால் அது திரும்பி வராது.
*****
சுலோகம்
“அஹோராத்ராணி கச்சந்தி சர்வேஷாம் ப்ராணினாம் இஹ
ஆயும்ஷி க்ஷபயந்த்ய ஆசு க்ரீஷ்மே ஜலம் இவ அம்சவ:”
பொருள்
கோடைக் காலத்தில் தண்ணீரை சூரியன் வற்றச் செய்வது போல, ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் உயிரினங்களை மாயச் செய்கின்றன.
*****
சுலோகம்
“ஆத்மானம் அனுசோச த்வம் கிம் அன்யம் அனுசோசசி
ஆயு: தே ஹீயதே யஸ்ய ஸ்திதஸ்ய ச கதஸ்ய ச”
பொருள்
நீ நின்றாலும் நகர்ந்தாலும் வாழ்நாள் குறைந்து கொண்டே வரும்; ஆகையால் உன்னைப் பற்றி வருதப்படு; மற்றவர்கள் குறித்து வருந்தாதே.
*****
சுலோகம்
“சஹ ஏவ ம்ருத்யுர் வ்ரஜதி சஹ ம்ருத்யுர் நிஷீததி
கத்வா சுதீர்கம் அத்வானம்சஹ ம்ருத்யுர் நிவர்தத”
பொருள்
நாம் நடந்தாலும் மரணம் நம்மைப் பின் தொடரும்; உட்கார்ந்தாலும் அதுவும் அருகில் அமர்ந்து ஓய்வெடுக்கும்; எவ்வளவு தூரம் போனாலும் அதுவும் வரும்; நாம் திரும்பி வந்தால் நம்முடன் திரும்பியும் வரும்.
*****
சுலோகம்
“காத்ரேஷு வலய ப்ராப்தா: ஸ்வேதாள் சைவ சிரோ ரஹா:
ஜரயா புருஷோ ஜீர்ண: கிம் ஹி க்ருத்வா ப்ரபாவயேத்”
பொருள்
நம் அங்கங்களின் மீது சுருக்கம் விழுகிறது; முடி நரைத்து விடுகிறது; முதிய வயது காரணமாகப் போன அழகு திரும்பி வருமா?
*****
சுலோகம்
“நந்தந்த்ய உதித ஆதித்யேநந்தந்த்ய அஸ்தம் இதே ரவௌ
ஆத்மனோ அவபுத்யந்தே மனுஷ்யா ஜீவித க்ஷயம்”
பொருள்
காலையில் சூரியன் உதிக்கும் போதும், மாலையில் சூரியன் மறையும் போதும் மக்கள் சந்தோஷம் அடைகிறார்கள்; ஆனால், அவர்களின் ஆயுள் குறைந்து வருவதை அவர்கள் உணர்வதில்லை.
*****
சுலோகம்
“ஹ்ரச்யந்த்ய ருது முகம் த்ருஷ்ட்வா நவம் நவம் இஹ ஆகதம்
ருதூணாம் பரிவர்தேன ப்ராணினாம் ப்ராண சம்க்ஷய:”
பொருள்
ஒவ்வொரு பருவம் வரும் போதும், ஏதோ புதிதாக வருவது போல மகிழ்கிறார்கள்; ஆனால் மாறி மாறி வரும் பருவங்களினால் அவன் ஆயுள் குறைந்து கொண்டே வரும்.
*****
சுலோகம்
“யதா காஷ்டம் ச காஷ்டம் ச சமேயாதாம் மஹா அர்ணவே
சமேத்ய ச வ்யபேயாதாம் காலம் ஆஸாத்ய கஞ்சன
ஏவம் பார்யா: புத்ரா: ச ஜ்நாதய: ச வசூனி ச
சமேத்ய வ்யவதாயந்தி த்ருவோ ஹ்ய ஏஷாம் விநா பவ:”
பொருள்
கடலில் மிதக்கும் இரண்டு மரக்கட்டைகள் சிறிது காலத்துக்கு ஒன்றாகப் பயணித்துப் பிரிந்து விடுகின்றன. அது போலத்தான் மனைவி, மக்கள், உடன் பிறந்தோர், சொத்து, சுகம் ,செல்வம் எல்லாம் சிறிது காலத்துக்கு உடன் வரும். அவைகளைப் பிரிவது தவிர்க்க முடியாதது.
*****
சுலோகம்
“ந அத்ர கஸ்சித் யதா பாவம் ப்ராணீ சமபிவர்ததே
தேன தஸ்மின் ந சாமர்த்யம் ப்ரேதஸ்ய அஸ்த்ய அனுசோசத:”
பொருள்
ஒருவனுடைய தலை விதியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. மற்றவர் இறக்கும் போது அழுவதால் ஒருவன் தனது மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது.
*****
சுலோகம்
“யதா ஹி சார்தம் கக்சந்தம் ப்ரூயாத் கஸ்சித் ப்தி ஸ்தித:
அஹம் அப்ய ஆகமிஷ்யாமி ப்ருஷ்டதோ பவதாம் இதி
ஏவம் பூர்வைர் கதோ மார்க: பித்ரு பைதாமஹோ த்ருவ:
தம் ஆபன்ன: கதம் சோசேத் யஸ்ய ந அஸ்தி வ்யதிக்ரம:”
பொருள்
வண்டியில் போகும் பயணிகளைப் பார்த்து நானும் பின்னால் வருகிறேன் என்று சொல்லுவதைப் போல, நாமும் நமது முன்னோர் சென்ற வழியில் செல்கிறோம்; அது திரும்பி வராத பயணம். அதில் சேர்ந்த பின்னர், புகார் செய்வதற்கு என்ன இருக்கிறது?
*****
சுலோகம்
“வயஸ: பதமானஸ்ய ஸ்ரோதசோ வா அநிவர்தின:
ஆத்மா சுகே நியோக்தவ்ய: சுக பாஜ: ப்ரஜா: ஸ்ம்ருதா:”
பொருள்
ஓடும் நதியின் நீர் திரும்பி வருவதில்லை; அதுபோலத்தான் நம் வாழ்நாளும். ஒவ்வொருவரும் அற வழியில் இன்பம் அடைய முயல வேண்டும்; எல்லோரும் விரும்புவது சந்தோஷத்தைத்தானே.
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.