அறம் குறித்து அறிஞர்கள்
அறத்தின் இலட்சணம் அறியாதவரே, 'அறம் செய்தோம், கூலி எங்கே?' என்று இரைந்து கொண்டிருப்பர்.
- மேட்டாலிங்க்
அதர்மம் அணியும் ஆடை ஐஸ்வரியம்; தர்மம் தரிப்பது தரித்திரம்.
- தியோக்னீஸ்
பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்கிறான்.
- ஸெனீக்கா
குளிர் மிகுதிதான். கந்தை உடைதான்! ஆனால் என் ஒழுக்கம் எனக்கு உஷ்ணம் தரும்.
- ட்ரைடன்
அறிவு மட்டும் கூறும் வழியில் செல்லற்க. ஆன்மா முழுவதும் ஆணையிடும் வழியில் செல்க.
- டால்ஸ்டாய்
அறத்திற்குத் தலைசிறந்த வெகுமதி அதனிடத்திலேயே கிடைக்கும்; மறத்திற்குத் தலைசிறந்த தண்டனையும் அதனிடத்திலேயே கிடைக்கும்.
- பழமொழி
அறம் தன்னில் தானே அடையும் வெகுமதியை விட அதிகமான வெகுமதியை வெளியில் பெற முடியாது. அதுபோல் மறமும் தன்னில் தானே அடையும் தண்டனையை விட அதிகமான தண்டனையை வெளியில் பெற முடியாது.
- பேக்கன்
பேரின்ப வீட்டை அடையும் நெறி துறவறம் அன்று; அனவரதமும் அறச்செயல் ஆற்றுவதேயாகும்.
- ஸ்வீடன் பர்க்
மனிதர் கவனமாய் வடித்து எடுப்பின், தீமையிலும் நன்மை தெளியலாம்.
- ஷேக்ஸ்பியர்
ஒரு பொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு; நாம் செய்யும் நற்செயலே அது.
- மேட்டாலிங்க்
நல்ல விஷயங்கள் தீய விஷயங்கள் என்று பிரிக்க முடியாது. நாம் அவற்றின் வசப்படாமல், அவை நம் வசம் வந்துவிட்டால் எல்லாம் நல்ல விஷயங்களே.
- எட்வர்டு கார்ப்பெண்டர்
எல்லா நல்ல காரியமும் பேச்சும் பணம் பெறாமல் செய்யப்பட வேண்டும் என்பதே இறைவன் திருவுளம் என்பது தெளிவு.
- ரஸ்கின்
என்ன செய்யலாம் என்று வக்கீல் கூறுவது விஷயம் அன்று; என்ன செய்யவேண்டும் என்று அறிவும், அறமும், அன்பும் கூறுவதே விஷயம்.
- பர்க்
அற வாழ்வின் அளவுகோல் விசேஷ முயற்சிகள் அல்ல; தினசரி வாழ்க்கையேயாகும்.
- பாஸ்கல்
மனத்தைத் தவிர குறையுள்ளது இயற்கையில் வேறு கிடையாது. அன்பில்லாதவரே அங்கவீனர். அறமே அழகு. அழகான மறம் முலாம் பூசிய சூனியப் பேழையாகும்.
- ஷேக்ஸ்பியர்
விரும்ப வேண்டியவற்றை விரும்பவும், வெறுக்கத் தகுந்தவற்றை வெறுக்கவும் செய்யுமாறு நன்னெறியில் செலுத்தப்படும் அன்பே அறமாகும்.
- ஸெயின்ட் அகஸ்டைன்
நாம் அறநெறியில் நிற்கும் ஒவ்வொரு சமயத்திலும் ஏதேனும் இன்பம் அதிகரியாவிட்டால், ஏதேனும் துன்பம் குறைந்திருக்கும் என்பது உறுதி.
- பென்தம்
அறம் இதுவென்று அறியாமலும், விரும்பியதைச் செய்ய முடியாமலும் இருந்தாலும், அறத்தில் ஆசை கொள்வதால் தீமையை எதிர்க்கும் தெய்வீக சக்தியில் நாமும் ஓர் அம்சமாவோம்.
- ஜார்ஜ் எலியட்
நம்மை நாம் வெல்லாதவரை அறம் எதுவும் இல்லை உழைப்பு வேண்டாத செயல் எதுவும் மதித்தற்கு உரியதன்று.
- டிமெஸ்டர்
கடவுள் ஆன்மாவைப் புழுதியில் புதைத்திருப்பதெல்லாம் அதன் மூலம் தவறினூடே உண்மைக்கும், குற்றத்தினூடே அறத்திற்கும், துன்பத்தினூடே இன்பத்திற்கும் வழி திறந்து செல்வதற்காகவேயாகும்.
- எங்கல்
தீய நெறியில் செல்லாதிருக்க எப்பொழுதும் எச்சரிக்கையாயிருப்பதை விட, நல்ல விஷயங்களில் மனதை ஈடுபடுத்தி அதன் மூலம் தீய நெறியின் நினைவே எழாதிருக்கச் செய்வதே நலம்.
- பித்தாகோரஸ்
நமது உணர்ச்சியின் தன்மை, விசாலம் ஆகிய இரண்டின் அளவே நமது ஒழுக்கமாகும்.
- ஜார்ஜ் எலியட்
அற வாழ்வில் ஆசையுள்ளவன் சத்தியத்தைச் சார்ந்து நிற்கும் பொழுதுதான் அவன் துக்கம் தொலைகிறது; அதற்கு முன்னால் அன்று.
- ப்ளேட்டோ
நன்மை ஒரு நல்ல வைத்தியன். ஆனால், தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன்.
- எமர்ஸன்
நம்மில் உயர்ந்தோரிடமும் எவ்வளவோ தீமை இருக்கின்றது; நம்மில் தாழ்ந்தோரிடமும் எவ்வளவோ நன்மை இருக்கின்றது. ஆகையால் பிறரைப் பற்றிப் பேச நம்மில் எவர்க்கும் தகுதி இருப்பது அரிது.
- ராக்பெல்லர்
இருதயத்தைப் பெருக்கி அலங்கரித்துக் காலியாக வைத்திருப்பது என்பது நாம் விரும்பினாலும் கூட முடியாத காரியம். நாம் தயாராக்குவது நன்மை குடிபுகவா, தீமை குடிபுகவா என்பதே கேள்வி.
- கிப்சன்
நமது நன்மையை அடையத் தவறிவிட்டாலும் பிறர் நன்மை இருக்கவே செய்கின்றது. அதற்காக முயலுதல் தக்கதே.
- ஜார்ஜ் எலியட்
மனிதனால் இயல்வதெல்லாம் இயற்றத் துணிவேன்; அதற்கு அதிகம் செய்யத் துணிபவன் மனிதன் அல்லன்.
- ஷேக்ஸ்பியர்
நமது செயலின் விளைவுகளை நாம் ஏற்றுக் கொள்ளும் முறையே நமது ஆன்மாவின் உயர்வை அளக்குங் கோலாகும்.
- மார்லி
பல துன்பங்களுக்குப் பிறப்பிடமென்று நான் நகரத்தின் களியாட்டிடங்களை விட்டுவிட்டாலும், இன்னும் என்னை விட்டுவிட மட்டும் கற்றுக்கொள்ளவில்லை.
- செயின்ட் பேஸில்
ஒரு புல் முளைத்த இடத்தில் இரண்டு புல் முளைக்கவும், ஒரு கதிர் விளைந்த இடத்தில் இரண்டு கதிர் விளையவும் செய்பவனே இராஜீயவாதிகள் அனைவரிலும் தேசத்திற்கு அதிக உபயோகமான ஊழியம் செய்தவனாவான். அவனே மனித வர்க்கத்தால் அதிகமாகப் போற்றப்படத் தகுந்தவனுமாவான்.
- ஸ்விப்ட்
தான் அறத்தில் நிற்பதால் பிறர் அடையும் சாந்தியும் சந்தோஷமும் இவ்வளவென்று கணித்தல் அநேகமாக இயலாத காரியமாகும்.
- அக்கம்பிஸ்
தன்னெறி அதிகக் கரடு முரடென்றாவது, அதிக கஷ்டமென்றாவது கூறப்படக் காணோம். கூறப்பட்டிருப்பதெல்லாம் அது குறுகியது என்றும், கண்டு பிடிக்கக் கடினமானது என்றுமே.
- ஆவ்பரி
குற்றமான காரியம் செய்யக் கூசவேண்டியது அவசியமே; ஆனால், பிறர் குறை கூறுவாரோ என்று அளவுகடந்த ஜாக்கிரதை அமைத்துக் கொள்பவன் அன்புடையவனாக இருக்கலாம்; உயர்ந்தோனாகமட்டும் இருக்க முடியாது.
- ப்ளூட்டார்க்
நன்றாய் எழுதப்பட்ட ஜீவிய சரிதம் நன்றாய் வாழப்பட்ட ஜீவியத்தைப் போலவே அரியதாகும்.
- கார்லைல்
நான் எனக்காக மட்டுமே உள்ள ஆசைகளை வைத்துக் கொள்ளாதிருக்க முயலுகின்றேன். ஏனெனில், அவை பிறருக்கு பயவாதிருக்கலாம். தவிர இப்போழுதே அவை என்னிடம் அதிகமாக இருக்கின்றன.
- ஜார்ஜ் எலியட்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.